கருத்துச் சுதந்திரம்

கருத்துச் சுதந்திரந்தான் - வெறும்
    கைப்பிடி மண்ணோ? கடைப்பொருளோ?
பெருத்த பணக்குவிப்போ? - இங்கு
    பெற்றதை யாரும் பறித்துக்கொள்ள?
அருமைத் தவப்பயனாய்! - வந்த
    ஆரமிழ்தை எங்கள் அணியழகைத்
திருடக் கொடுப்போமோ? - எங்கள்
    திண்ணத்தை வெற்றென எண்ணுவதோ?

சொல்லில் உயர்விருந்தால் - அதைச்
    சொல்லும் அளவு துணிவிருந்தால்
அல்லல் கெடுப்பதற்கே - தனி
    ஆற்றலும் மூச்சும் அதிலிருந்தால்
வில்லின் கணையெனவே - எண்ணம்
    வீறுடன் பாய்ந்திட வேண்டுமன்றோ?
கொல்லும் கொடுமைவிழ - அந்தக்
    கொல்லரி வாளினைத் தூக்கிடுவோம்!

வச்சிரம் ஒத்ததுகாண் - அது
    வைரத்தில் ஆக்கிய கத்தியடா!
அச்சந் தருபவற்றை - நம்
    ஆத்திரத் தீயில் இடுதற்கென்றே
உச்சம் வளந்ததழல் - உள்ள
    ஊற்றின் சுரபி, உருவமில்லா
இச்சைக் கரசியவள் - கலை
    இன்மகள் ஏறும் இயல்பெனுந்தேர்!

எண்ணும் கருத்தையெல்லாம் - குறை
    ஏறிடா வண்ணத் துயர்வகையில்
பண்ணும் செயல்களினால் - இந்தப்
    பார்மிசை நல்லவை நின்றனகாண்!
பண்டிங் கிருந்தநிலை - கவிப்
    பாக்களை ஆட்சி மதித்தநிலை!
உண்டின்னும் நாடகத்தே - அவ்
    வுரிமை உயிர்ச்செல்வம்! தேய்வதிலை!

நாடு நலம்பெறவும் - பல
    நல்லறி வாளர்கள் ஒப்பிடவும்
ஏடு புகழ்கொளவும் - வந்த
     ஏற்றக் கருத்துச் சுதந்திரத்தை
மூடும் திரையொன்றிலை - புகை
    மூட்டமில்லை வெறுங் கூட்டமில்லை
கூடும் உரிமையென்போம்! - இதைக்
    கொல்லும் அரசோர் அரசிலையே!!

-விவேக்பாரதி
06.11.2017

Comments

Popular Posts