குமாரி தரிசனம்

தேனியின் கண்ணுக்குத் தெள்ளத் தெளிவாய்
   தெரிந்த மலரினைப் போல் - வெறும்
மானிடருக்கும் இறைவன் உருவத்தின்
   மர்மம் தெரிந்ததுபோல்!
மீனுக்கு நன்கு செழித்த புழுக்களின்
   மின்னல் தெரிந்ததுபோல் - இங்கு
நானும் ரசித்திட நங்கையே நின்முகம்
   நன்கு தெரிந்ததம்மா!

என்னை எனக்கே காட்டிட வந்தவள்
   என்று புரிந்ததம்மா! - அடி
கன்னிநின் செய்கைகள் யாவிலும் விந்தையின்
   காந்தம் இழுத்ததம்மா!
மின்னல் விழிகளும் தோன்றும் சுடர்களும்
   மிரட்டும் கூந்தலும் தான் - என்றன்
முன்னம் விரிந்திடக் கண்டவன் ஆனந்த
   முக்தியைக் காண்பேனம்மா!

கோபப் பார்வையும் கொல்லும் மொழிகளும்
   கொழுகொழு கன்னங்களும் - வரும்
ஆபத்தில் என்னுடன் நிற்பேன் என்கிற
   ஆத்ம சத்தியமும்
தாபம் தைரியம் காதல் நட்பொடு
   தன்னை வளர்க்கும் குணம் - என
நீ பல ரூபங்கள் எடுத்து வந்திடும்
   நிழலைக் கண்டேனம்மா!

தோளைக் கொடுத்திடும் தோழிநின் எழிலுருத்
   தோற்றம் புகழுகிறேன்! - என்
நாளை நவநவ மாக்கிடும் நங்கைநின்
   நல்லுரு போற்றுகிறேன்!
வேளையெல் லாமெனை விரும்பும் நெஞ்சினை
   வியந்து பாடுகிறேன்! - சுடர்
காளி உருவென வந்தனையே அடி
   கன்னீ! வணங்குகிறேன்!!

-விவேக்பாரதி
14.12.2017

Comments

Popular Posts