மனக்குள சலனம்

காலையிலிருந்து மனக்குளத்தில் ஏதோ ஒரு இனம் புரியாத சலனம். கவிதையாகவும் பரிமளிக்கவில்லை, கவிதை எழுதவும் வரவில்லை, வேறு எந்த விஷயத்திலும் நாட்டத்தைச் செலுத்தவும் அது விடவில்லை. என்ன செய்வது? உன்னிடம் பதில் கேட்பதை அன்றி எனக்கும் வேறு என்ன தெரியும் கணநாதா? நீயே சொல்,

சக்தி கொடுத்தவென் சாகாக் கவித்திறமை
மிக்க! எனக்குள்ளே மீண்டுவர! - விக்னேசா!
பாதம் பிடிக்கின்றேன்! பாதருவாய்! பாலகனின்
சேதம் தடுத்தருளைச் சேர்!

சேர்ந்த கவித்திறமை செத்து விலகிடுமோ?
தேர்ந்த நினதருளும் தோற்றிடுமோ? - வார்த்தையெனை
விட்டு விலகி வியர்த்திடத்தான் வைத்திடுமோ?
கொட்டு பதிலென்னைக் கொண்டு!

கொண்டகலை, சக்தி கொடுத்தகலை, ஆர்வத்தால்
விண்டகலை என்செய்யுள் வித்தையினால் - அண்டமெலாம்
பாடும் வலிகேட்பேன்! பார்த்தருள்வாய்! விக்னேசா!
நாடுவது நல்கின் நலம்!

நலம்வேண்டேன்! வாழ்வில் நயம்வேண்டேன்! தேகப்
பலம்வேண்டேன்! வேண்டுவதென் பாட்டே! - குலதேவா
உச்சி மலைவாழ் உயிர்த்தேவா! என்நெஞ்சின்
அச்சில் கவியை அமை!

அமைக்கும் கவியில் அகில வனப்பைச்
சமைக்கும் திறமை தருவாய்! - குமையும்
மனக்குளத்தில் நேர்சலனம் மங்கித் தெளிய
நினக்குளத்தைத் தந்தேன் நினை!

-விவேக்பாரதி
15.11.2017

Comments

Popular Posts