நிரந்தரமோ?

ஓட்டம் நிரந்தரமோ? - இந்தக்
கூட்டம் நிரந்தரமோ?
வாட்டம் நிரந்தரமோ? - உந்தும்
நாட்டம் நிரந்தரமோ?

மாறிமாறி ஓடும் வாழ்க்கைச் சுழல்தனில்
       மாற்றம் நிரந்தரமோ? - பல
   மல்யுத்த போர்கள் மண்ணில் புனைகிறோம்
       மண்ணும் நிரந்தரமோ?
ஏறிவரு கின்ற பாதை மறக்கிறோம்
       ஏற்றம் நிரந்தரமோ? - அட
   எதுவும்ந மக்கென் றெங்கும் நினைக்கிறோம்
       எண்ணம் நிரந்தரமோ?

தெய்வமும் நாமும் சமமென் றுணர்ந்திடும்
       தெளிவினைக் காணோமோ? - பிறை
   தேய்வதென் றாலும் அழகாய் வளர்ந்திடும்
       தெரிந்து நடவோமோ?
உய்வதும் உண்டு துஞ்சி நகர்வதும்
       உயர்வெனப் பூண்போமோ? - நம்
   உயிருடன் வாழும் பயனை அறிந்திடும்
       உணர்வைக் கொள்ளோமோ??

தானெனும் எண்ணம் தாழ்வைக் கொடுக்குமத்
       தர்மம் அறிவோமேல் - எந்தத்
   தருணத்தி லும்நாம் வெற்றி அடைவமித்
       தன்மை உணர்வோமே!
நானென நீயென யாரும் உழைத்திடும்
       நன்னிலை கொள்வோமேல் - புவி
   நல்லம ரப்பதி ஆகும் இதனியல்
       நன்கு தெளிவோமே!!

-விவேக்பாரதி
07.12.2017

Comments

Popular Posts