மதராஸாய் இருந்த சென்னை

சென்னை எனப்பெயரைச் சிறப்போடு ஏந்துகின்ற
அன்னை மதராஸின் அற்புதங்கள் பாடுகிறேன்!
முன்னைப் பழங்கதைகள் மூண்ட புகழ்மலைகள்
தன்வசங் கொண்ட தாய்பற்றிப் பேசுகிறேன்!
மேவும் பசுந்தடங்கள் மேல்வழியும் நன்னகரம்
கூவும் தொழிற்சாலை குவிந்திருக்கும் இந்நகரம்
பல்லவர் ஆட்சியிலே படுவழகாய் நின்றுமா
மல்லபுரம் பெற்ற மாண்புகளைக் கேளுங்கள்!
சென்னப்ப நாயகரின் நினைவாக அப்புறமாய்ச்
சென்னைப் பட்டினமான சேர்ப்புகளைக் கேளுங்கள்!
ஆசியக் கண்டத்தில் அரும்பெரிய கடற்கரையாய்ப்
பேசப் படுகின்ற மெரினாவைப் பாருங்கள்!
கிழக்கிந்த்யக் கம்பேனி நடத்தக் கால்வைத்துப்
புழக்கத்தால் நமையாண்ட புராணங்கள் கேளுங்கள்!
முதன்முதலாய் நகராட்சி நிலைகாணப் பெற்றதுவும்
முதல்ரயில்வே சென்னைவிட்டு ஆர்க்காட்டைத் தொட்டதுவும்
மவுண்ட்ரோடின் பரபரப்பும் மயிலாப்பூர் தரிசனமும்
கவர்கின்ற கட்டிடங்கள் கலைநயங்கள் உற்றதுவும்
தாவும் பறவைகள் தான்நிறைந்த மதராஸின்
கூவக் கரையழகும் கொள்ளையெழில் பாருங்கள்!
பக்கிங்காம் கால்வாயில் பாவேந்தன் சென்றதுவும்
பக்கத்துப் பச்சையப்பர் பார்த்த அடையாறும்
பாரதியார் பேசிய மெரினாக் கடற்கரையும்
சீருடனே காந்திகண்ட சென்னைக் கலையழகும்
வெள்ளைப் பரங்கியரும் வேதம் உணர்ந்தவரும்
பிள்ளைப் பிராயம்முதல் பின்னிருந்த ஆரியரும்
தள்ளி இருந்த தமிழர்களும் ஒன்றாகி
வெள்ளமென வாழ்ந்த வெற்றிகளைக் கேளுங்கள்!
அண்ணா துரையாலே பின்னாளின் பேர்மாற்றிக்
கொண்ட மதராஸின் கொள்கைகளைப் பாருங்கள்!
வந்தாரை வாழவைத்து வாழ்க்கைக் கதிகொடுத்துச்
சுந்தரமாய் முன்னூறைத் தாண்டி ஜொலித்திருக்கும்
மதராஸின் மேண்மைகள் சொல்லி அடங்காது
பதம்நூறு சொன்னாலும் பாரம் குறையாது!
பெட்டிக் குடிகளிலே வாழ்கின்ற வாசிகளே
இற்றைக் கேனும் இவையறிந்து நமைவளர்க்கும்
மதராஸ் தாயை மனங்கொண்டு புகழ்ந்துரைப்போம்
இதைவிடப் பேரின்பம் ஏது?


-விவேக்பாரதி

22.08.2017

Comments

Popular Posts