காளியும் கவிதையும்

ஆழம் சொல்கின்றாள் - அவளே
    அங்கும் செல்கின்றாள்
சூழும் திசையெல்லாம் - காளி
    சொடுக்கி இழுக்கின்றாள்!
வாழும் பொழுதுக்குள் - பலவாய்
    வளைவை வைக்கின்றாள்
வீழும் படிவைத்துப் - புதுமை
    வித்தை கொடுக்கின்றாள்!


மனிதக் கூட்டத்திலும் - அவர்
    மனத்தின் ஈட்டத்திலும்
தனிமை வாட்டத்திலும் - சில
    தர்க்க நீட்டத்திலும்
எனையே ஆடவிட்டாள் - கொஞ்சம்
    எழுப்பிப் பாடவிட்டாள்
வினையே எனுங்காலை - அதற்குள்
    வீற்றிருந் தாட்டுகிறாள்!

புதுமை செய்கின்றாள் - அதிலே
    புழக்கம் பெருவதற்குள்
புதுமை இன்னொன்று - அதற்கும்
    புதுமை இன்னொன்றாய்!
நிதமும் நாடகத்தில் - என்னை
    நீட்டி மடக்குகிறாள்!
எதைநான் செய்துவிட்டேன்?- தோளில்
    ஏறிச் சிரிக்கின்றாள்!

வாழ்வில் இன்பம்வரும் - கொஞ்சம்
    வாட்டும் துன்பம்வரும்
காழ்ப்பும் புகழ்ச்சியுமாய் - எல்லாம்
    கலந்து கட்டிவரும்!
தாழ்த்தும் சிந்தையிலை - மேலே
    தானாய் உயர்த்தவில்லை
ஆழ்த்திப் பார்த்தபடி - அவளே
    ஆட்டம் புரிகின்றாள்!

சலனம் ஓய்வதில்லை! - நெஞ்சம்
    சரியும் ஆவதில்லை!
மலமும் மாய்வதில்லை! - கெட்ட
    மாயை தீர்வதில்லை!
உலகம் புரியவில்லை! - எல்லாம்
    உமையே என்றுவிட்டால்,
மலராய் மாற்றுகிறாள் - மாசை
    மறுகணம் தூற்றுகிறாள்!

காளி இருக்கின்றாள்! - அதனால்
    கவிதை துளிர்க்கிறது!
காளி இருக்கின்றாள் - அதனால்
    கவலை பறக்கிறது!
காளி இருக்கின்றாள் - அதனால்
    காயம் மறக்கிறது!
காளி இருக்கின்றாள் - அதனால்
    கடமை இனிக்கிறது!!

-விவேக்பாரதி
23.11.2017

Comments

Popular Posts