ஞானச் சிறுவர்

கடையத்தில் பாரதி தேசியக் கல்வி மாணவர்கள் கேட்க, எழுதிய பாடல்...

முன்னால் வரவேணும் தம்பி - வெற்றி
   முயற்சி செய்வதை நம்பி!
உன்னால் முடிந்தவினை செய்து - இந்த
   உலகை உயர்த்திவிடு தம்பி!

டீவியில் மூழ்குதல் விட்டு - வெளி
   திரிந்து விளையாட வேணும்!
ஓவியம் வரைந்திட வேணும் - நல்
   ஒழுக்கம் கற்றிட வேணும்!

அன்னையும் தந்தையும் தெய்வம் - நல்ல
   ஆசிரியர் உயர்த் தெய்வம்
நண்பர்கள் தோள்தரும் தெய்வம் - அட
   நானும் நீயும்கூட தெய்வம்!

கல்வி அடைவது கடமை! - அதைக்
   கற்றும் கொடுப்பதுன் திறமை!
சொல்லில் உண்மைவர வேணும்! - பிறர்
   சொற்களைக் கேட்கவும் வேணும்!

நாட்டை வணங்குதலும் வேணும் - அதில்
   நல்லவனாய் வாழ வேணும்!
ஆட்டு மந்தைகளைப் போலே - தெளி
   வற்றுத் திரிதல் மிகப்பாவம்!

எழுதிப் பழகிடவும் வேணும் - நெஞ்சில்
   என்றும் மகிழ்ச்சி கொள்ள வேணும்!
அழுது புலம்புதலும் குற்றம் - தாய்
   அளித்த மொழிமறத்தல் குற்றம்!

அச்சப் படுவதுவும் குற்றம் - யார்க்கும்
   அடங்காது இருப்பதுவும் குற்றம்!
துச்சம் எனவெண்ணிப் பிறர்க்கு - நீ
   துன்பம் இழைத்தல் பெருங்குற்றம்!

சுட்டிக் குறைசொல்லல் குற்றம் - ஒன்று
   சுட்ட மூன்று நமைச் சுட்டும்!
குட்டிக் குறும்புகளும் இன்பம் - அதில்
   குணங்கள் பழகுவதும் இன்பம்!

யார்க்கும் நல்ல உயிராகி - நீ
   யாண்டும் செயல்படுதல் வேணும்!
வேர்க்குள் நீர் துயில்வதைப் போல் - கல்வி
   வேட்கை உளம்நிறைய வேணும்!

தேசம், தெய்வம் சமம் தம்பி! - என்றும்
   தேம்பா திருந்திடுதல் யோகம்!
ஆசை அளவுடனே கொண்டு - கன
   வாழப் பட்டுயர்ந்து வாழ்க!!

-விவேக்பாரதி
21.12.2017

Comments

Popular Posts