தாடி [எ] முகமயிர்

காதலிலே தொல்வியென்றால் தானா? இந்தக்
    கருந்தாடி தன்னைநான் வளர்க்க வேண்டும்?
வேதமுனி யாவருமே வளர்த்த தாடி,
    வெண்தாடிப் பெரியார்தான் விளைத்த தாடி,
சீதமிகும் சிவபெருமான் வளர்த்த தாடி,
    ஸ்ரீபரசு ராமனவர் முகத்துத் தாடி,
ஈதனைத்தும் அத்தோல்வி வளர்த்த தாமோ??
    இக்கருத்தெம் மக்களிடை நீங்கி டாதோ?

தாடியினால் முகத்தோற்றம் மறையக் கூடும்!
    தாடியினால் உள்ளேக்கம் புதையக் கூடும்!
தாடியினால் தனியழகு வாய்க்கக் கூடும்!
    தாடியினால் அறிவாளித் தோற்றம் தோன்றும்!
தாடியினால் காசுமிச்சம் என்ற போதும்
    தாடியொன்றே ஆண்சிங்கம் தரிக்கும் கோலம்!
தாடியினால் உயர்வன்றித் தாழ்விங் கில்லை
    தாரணியில் இதையறிவோர் ஞானி அன்றோ!!

முகத்தாடி நீள்வதனால் அகமும் நீண்டு
    முன்னோர்போல் முதிர்ச்சியையும் தெளிவாய்க் காட்டும்!
அகத்தூய்மை கொண்டவரே முகத்தில் தாடி
    அதிகமெனக் கொள்கின்றார்! சிந்தை மாற்றும்
பகைநெஞ்சர் யாவருமே மழித்துக் கொண்டு
    பண்பாளர் போல்தெரிய எண்ணு கின்றார்
நகையுள்ளம் பொய்வேஷம் தரிப்ப தில்லை!
    நடிக்காதோர் இதைமழிக்கத் தேவை இல்லை!!

-விவேக்பாரதி
06.11.2017

Comments

Popular Posts