மோகினி ரூபம்


பக்கத்து பெருமாள் கோவிலில் கண்ணன் மோகினியாக வந்திருந்தான்...கவிதையையும் சேர்த்துக் கொண்டு வந்தான்...

மூடிக் கிடக்கும் திரைக்குள்ளே
    மோகினி ரூபம் கண்டேன் - அவள்
    மூக்குத்தி அழகைக் கண்டேன்!
ஆடிடும் விழிகள் தேனெனும் அதரம்
    அலர்ந்து சிரிப்பதைக் கண்டேன் - அது
    ஆண்டவன் உருவெனக் கண்டேன்!

வெள்ளுடை தாங்கி வெங்கலச் சிலையாய்
    வேணு கோபாலன் வந்தாள் - நான்
    வேண்டும் வரங்களைத் தந்தாள்!
வெள்ளி நிலாபோல் பொலிவுறும் வதனம்
    வேட்கை கொடுத்திட வந்தாள் - அவள்
    வேதனை தீர்த்திட வந்தாள்!

தங்கத்தில் அணிகலன் அங்கத்தில் அழகியல்
    தாரகை பூமியில் கண்டேன் - அவள்
    தந்த ஏகாந்தம் உண்டேன்
மங்கள ஜோதி மாதவன் ரூபம்
    மங்கையு மானது கண்டேன் - அந்த
    மகேசன் காதலைக் கண்டேன்!

மலர்ச்செண் டேந்தி மகிழ்வினைத் தூண்டி
    மனத்தை அழித்திடும் தோற்றம் - அதில்
    மாதவன் எழிலின் ஊட்டம்
உலகினை அளந்தென் உள்ளமும் அளந்த
    உற்சவ மோகினிக் கோலம் - என்
    உணர்வெல்லாம் அவன் ஜாலம்!

நெற்றியில் நாமம் நெஞ்சில் பதக்கம்
    நெகிழ்த்தும் பக்திப் பிரவாகம் - இது
    நாராயணனின் மாயம்
கற்றைச் சடைமுடி கமல மலர்ப்பதம்
    கன்னிகை ரூபத்தில் கண்ணன் - என்
    காளியின் அண்ணன் கண்ணன்!!

-விவேக்பாரதி
28.12.2017

Comments

Popular Posts