புதுவெம்பாவை - வெள்ளை நுரையெழுப்பும்


5) வெள்ளை நுரையெழுப்பும்...

வெள்ளை நுரையெழும்பும் வீதி விசும்பினில்
கொள்ளை இருளகலக் கோகிலங்கள் தாம்பாடக்
கிள்ளைப் பறவைகள் கீச்சலிடும் ஓசையொடு
வள்ளையொலி கேட்டும் வளருதியோ பேய்த்தூக்கம்?
பிள்ளாய் எழுந்திராய்! பீடுடையான் சொல்கொடுப்பான்
உள்ளம் நிறைந்த உமைமைந்தன் பேரருளின்
வெள்ளத் தணையன் விநாயகன் பேர்பாடித்
துள்ளுநன் நீராடித் துய்த்திடுவோ மெம்பாவாய்!!

கருத்து: 

நெடிய வீதிபோல விரிந்து கிடக்கிறது வானம். அதில் வெள்ளை நிறத்தில் நுரைகள் எழுகின்றன.  ஆ! அவை மேகங்கள். அந்த மேகங்கள் இருட்டிலும்தான் இருந்தன. ஆனால் இருட்டு அகல அகல மேகங்கள் கண்களுக்குப் புலப்படுகின்றன. குயில்கள் பாடுகின்றன. கிளிகள் பேசுகின்றன. சின்னச் சின்னப் பறவைகள் கீச்சலிடுகின்றன. சேவல் கூட கூவுகிறது. இவற்றையெல்லாம் உன் காதுபடக் கேட்டுமா நீ இன்னும் உறங்குகிறாய்? இந்தப் பரவசம் உன்னை எழுப்பவில்லையா? என்ன பேய்த்தூக்கமா தூங்குகிறாய்? 

பிள்ளையே கொஞ்சம் எழுந்திரு! அருள் தரும் விநாயகம் நமக்குச் சொல்லும் கொடுப்பான். நமது உள்ளமெல்லாம் நிறைந்திருக்கிறான் உமையின் மைந்தன். அவன், அருள் தருவதில் வெள்ளத்துக்கு நிகரானவன். அந்த விநாயக தேவனின் பெயரினைப் பாடுவோம். 

துள்ளி ஓடுகிறதே இந்த ஆறு, அதில் அவன் பெயரைப் பாடி வாழ்ந்திடுவோம். அந்தச் சுகம் கொண்டாடி துய்ப்பதற்கு உரியதுதானே! என் பாவையே!!

-விவேக்பாரதி
20.12.2017

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி