காளி நாட்டியம்

இந்த ஓசையை ஒருவர் கொடுக்க அதனை மனம் உச்சரித்துக்கொண்டே இருக்க, ஒரு தோழியின் நாட்டியத்தைக் கண்டேன். இரண்டும் கொடுத்த விளைவு....

டுடும்டு டும்டு டும்டுடும்
டுடும்டு டும்டு டும்டுடும்

சினத்தின் ஜ்வாலை மேலெழச்
    சிவந்த கண்கள் வீசிடக்
கனத்த கூந்தல் பாய்ந்திடக்
    கழுத்தி னாரம் துள்ளிட
நினைத்த மாத்தி ரத்திலே
    நிகழ்த்தும் காலம் தாள்விழ
மனத்துள் சக்தி நாட்டியம்
    மணக்கும் ஞானக் கூத்தியல்!

டுடும்டு டும்டு டும்டுடும்
டுடும்டு டும்டு டும்டுடும்

அதட்டும் உள்ளம் ஓயவும்,
    அதற்குள் ஆற்றல் பாயவும்,
விதிக்கும் ஆசை வீழவும்,
    வினைக்குக் கட்டு சூழவும்,
மதிக்கு ளிங்கு காளியின்
    மலர்ப்ப தங்க ளாடிட,
ஜதிக்கு டுக்கை வாத்தியம்
    ஜனிக்கும் காளி நாட்டியம்!

டுடும்டு டும்டு டும்டுடும்
டுடும்டு டும்டு டும்டுடும்

எரிக்கும் சூரி யத்தழல்,
    எழுந்த காளி யின்நிழல்!
சிரிக்கும் வெள்ளி மீண்களோ,
    சிலிர்க்க வீழும் மல்லிகை!
விரித்தி யற்றும் ஞானமோ,
    விசைக்க ரத்தின் வாசனை!
உரித்தெ ழுந்த வார்த்தையின்
    உயிர்ப்பில் காளி நாட்டியம்!

டுடும்டு டும்டு டும்டுடும்
டுடும்டு டும்டு டும்டுடும்

எவர்க்கும் வாய்ப்ப தில்லைகாண்!
    எதற்கும் நேர்வ தில்லையாம்!
கவிக்கொ ழுந்தின் மேருவால்
    கடைந்தெ டுக்கும் பாலிலே,
சுவைக்கெ ழுந்த சொல்லெலாம்
    சுகங்கொ டுத்துத் தீர்ந்திடத்
தவத்தெ ழுந்த வார்த்தையில்
    தரைக்கு ளிந்த நாட்டியம்!

டுடும்டு டும்டு டும்டுடும்
டுடும்டு டும்டு டும்டுடும்

நிகழ்த்து கின்ற சக்தியின்
    நிழல்து வங்கும் நாட்டியம்!
அகத்தி னுள்ளி லம்பிகை
    அவழ்த்துக் காட்டும் நாட்டியம்!
பகைக்குத் தீமை நேரவும்,
    பவத்தின் கோரம் தீரவும்,
குகைக்குள் சக்தி நாட்டியம்
    குவிக்கும் நெஞ்சில் மாத்திரம்!!

டுடும்டு டும்டு டும்டுடும்
டுடும்டு டும்டு டும்டுடும்!!

-விவேக்பாரதி
17.12.2017

Comments

Popular Posts