இனிப்புக் கனவு

இனிப்புக் கனவில் எங்கெங்கும்
    இளைய நங்கை நிறைகின்றாள்!
வனப்பை எல்லாம் முன்காட்டி
    வாழ்வைப் பதிலாய்க் கேட்கின்றாள்!
மனத்துக் குள்ளே ஒருபீடம்
    மகிழ்ச்சி பொங்க அவள்வைத்துத்
தினமும் என்னை ஆள்கின்றாள்!
    திமிராய் என்னுள் வாழ்கின்றாள்!

நெஞ்சின் ஓரம் எண்ணங்களை
    நிகழ விட்டே சிரிக்கின்றாள்!
பஞ்சாம் என்னைப் பதம்பார்க்கப்
    பார்வைத் தீயை விரிக்கின்றாள்!
அஞ்சப் பழகிக் கிடந்தவனை
    ஆண்மைத் தேரில் அவளேற்றிக்
கொஞ்சம் புவியைக் காட்டுகிறாள்!
    கோலச் சிரிப்பில் பூட்டுகிறாள்!

என்னே இவளின் முகபாவம்!
    என்னே இவளின் சுகஜாலம்!
மின்னே நிகர்த்த ஒளியுருவாள்!
    மீட்டும் வீணைக் குரலொலியாள்!
என்னை இயக்கி எழுப்புவதில்
    என்றோ தேர்ந்த வித்தகிதான்!
பொன்னேர் கவிதா எனும்பெண்ணாள்
    பொழுதும் கனவில் வருகின்றாள்!!

-விவேக்பாரதி
05.11.2017

Comments

Popular Posts