இந்திர சமுத்திரம்

திருமதி தர்மா ராமன் அவர்கள் வாயால் வந்த "இந்திர சமுத்திரம்" என்னும் சொல் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு சென்றது. ஓரளவிற்கு சொல்லி இருக்கிறேன். நீங்களும் பாருங்களேன்!! 

இந்திர சமுத்திர அலையோசை - என்
    இருசெவிக் குள்ளும் கேட்கிறது!
மந்திர ஜாலம் இதுவென்றே - இள
    மனமிக வியந்து பார்க்கிறது!
சந்திர ஒளியின் கிரணத்தால் - அச்
    சமுத்திரம் வெளுத்துப் பாற்கடல்போல்
விந்தை படைக்கக் கண்டுகொண்டேன் - அவ்
    விரிவினை இன்னும் விளக்குகிறேன்!

தொலைவினில் வானம் கரியதுவாய் - காளி
    தொண்மிகு கூந்தல் நிறத்தினதாய்
அலைந்திடக் கண்டேன்! அவ்வெளியில் - மீன்
    அழகுகள் கண்டேன்! நடுவினிலே
மலையெனத் தோற்றம்! கருப்புருவம் - உரு
    மங்கிய தாய்வந் திருந்ததொன்று
நிலையினில் ஆடி வந்தவுரு - ஒளி
    நிழல்விடக் கண்டேன் கப்பலதே!

வந்தது கப்பல்! அதனிடையே - உடல்
    வனப்புடை தேவர் தேவதைகள்
வந்திறங் கித்தன் உறவினரை - மிக
    வளைவுடன் கட்டித் தழுவிநின்றார்!
கந்தரு வர்கள் குரலமுதால் - இசை
    கானமும் கூத்தும் கவிதைகளும்
பந்திவி ரித்தார் நானுமங்கே - எழில்
    பலகலை உண்டே பசிமறந்தேன்!

பொன்னிறம் பூண்ட புதுமணலை - நான்
    புகழம றந்தேன்! அக்கரையில்
மன்னிய மணலோ பொன்னிறமாய் - அசல்
    மங்கிடாத் தங்கப் பொலிவுடனே
நின்றது! நம்மூர் கண்கள்படின் - அவை
    நிச்சயம் ஏறும் வண்டிகளில்!
மின்னிய அந்த மணல்வெளியில் - உடன்
    மின்னிட வென்றே நானமர்ந்தேன்!

சுற்றிலும் தென்னை பனைமரங்கள் - குளிர்
    சுகந்தரும் வாடைத் தென்றலென!
முற்றிலும் ஒளியால் நிறைந்தவிடம் - பலர்
    முகிழ்த்திடும் காதல் இணைமலர்கள்!
ஒற்றுமை யோடே கடலலையில் - உடல்
    ஒன்றிட ஆடும் தேவதைகள்
பற்றுவ ளர்க்கும் காட்சியெல்லாம் - அப்
    பாற்கடல் மிசைநான் கண்டுகொண்டேன்!

சுண்டலை விற்கும் தம்பிகளும் - பல
    சுடிதார் குடைக்கீழ் சலனங்களும்
சண்டைகள் செய்யும் கூச்சல்களும் - ஒரு
    சத்தமும் இல்லாக் கடற்கரையில்
தெண்டிரை அலையின் சுருதியிலே - அத்
    தேவரும் பாடும் பண்வழியே
பெண்டவள் அழகைக் கண்டுகொண்டேன் - அப்
    பெருமையில் நானும் பாடுகிறேன்!

இந்திர புரியின் அழகையெலாம் - கடல்
    இசையுடன் காட்டி நின்றதுவே!
தொந்தர வில்லாக் கடற்கரைதான் - அதில்
   தோன்றிய தெல்லாம் அற்புதங்கள்!
எந்திர வாழ்வில் அலைபவர்கள் - அவ்  
    வெழிலினைக் கண்டால் மயங்கிடுவார்!
செந்தமிழ் கண்டேன் ஆதலினால் - அச்
    செழுமைகண் டும்நான் மயங்கவில்லை!!

-விவேக்பாரதி
16.11.2017

Comments

Popular Posts