புதுவெம்பாவை

பாவை இலக்கணத்தின் இலக்கியமாகக் காட்டப்படும் பிரபலமான இரு இலக்கியங்களும் "நாற்சீர் எட்டடி கொச்சகக் கலிப்பா" என்னும் யாப்பு வகையைச் சேர்ந்தது... எட்டடியும் ஒரே எதுகை அமைப்புடன், பெரும்பாண்மை வெண்சீர் வெண்டளையும் சிறுபாண்மை இயற்சீர் வெண்டளையும் விரவும் தளை அமைப்பை உடையது..வெண்டளை தரும் செப்பல் ஓசையால் அழகுற விளங்குவது. தலைவனது புகழைப் பாடிப் பெண்களைத் தலைவி துயில்விட்டு நீக்கி நீராட அழைப்பதே இதன் பாடுபொருட் தன்மையாகும். 

கணபதியைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நான் தலைவியாகித் தோழியரை அழைக்கும் "புதுவெம்பாவை" இதோ....நாளும் தொடர்ந்து முப்பதும் முடிய அருள் தர வேண்டும் பராசக்தி....

1)
 
புல்லின் நுனியழகில் பூத்த பனித்துளிபோல்
அல்லும் விடிந்த தறியாமற் கண்வளரும்
மெல்லிடையாய் வையத்து மெய்யாம்  இறைப்பொருளின்
வல்லதொரு மூல வடிவத்தான் சக்தியின்
நல்ல புதல்வன் நமதுமறைக் கேமுதல்வன்!
அல்லல் அறுத்திங் கருள்தருவான் கண்விழித்துச்
சொல்லால் கணபதியின் தூய புகழ்பாடிச்
செல்லுநீ ராடிச் செழிப்புறுவோ மெம்பாவாய்!!

விளக்கம் :
 
புல்லின் நுனியில் அழகான மலர் பூத்திருப்பது போல அழகிய வெண்பனி இருக்கின்றது. காலை வேளை வரும் வரையில் தான் அதற்கு அங்கு வேலை, சூரியன் எழுதுவிட்டால் அந்தப் பனித்துளி நீராவியாகிவிடும். தான் நீராவி ஆகும்போது தான் "விடிந்துவிட்டது, சூரியன் காயத் தொடங்கிவிட்டது" என்பதெல்லாம் அந்தப் பனித்துளிக்குத் தெரியும். அதனைப் போல இரவு விடிந்து காலை ஆனது கூடத் தெரியாமல், கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருக்கும் மென்மையான இடை உடைய பெண்ணே! உலகத்தில் 'உண்மை' எனச் சொல்லப்படும் இறைவன் என்னும் பொருளின் மூல வடிவமானவன், சக்தி என்றழைக்கப்படும் பார்வதி தேவியின் புதல்வன், நமது வேதங்கள் எல்லாம் முதலில் வணங்கக் கூடிய முதலானவன், நமது துன்பங்களை எல்லாம் அறுத்து நமக்கே இங்கு அருள் தருவான்.
என் பாவையே! கண்கள் திறந்து, வாய் மணக்கும் சொற்களைக் கொண்டு கணபதி தேவனின் தூய்மையான புகழைப் பாடிச், சென்றுகொண்டே இருக்கும் தெளிந்த நீரோடையில் நீராடி, உள்ளமும் உடலும் ஆன்மாவும் செழிக்க மகிழ்ச்சி கொள்வோம்!!

-விவேக்பாரதி
16.12.2017

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி