கல்யாணி உமையே

அடியவர்க் கன்றோ உத்தரவு - நானுன்
    ஆசை மகனல்லவோ! - என்றனை
    அழைப்பதும் நீயல்லவோ!
குடியிருக் கின்ற நெஞ்சிடையே - நின்
    கொலுமிக எழிலல்லவோ! - எனிலுமுன்
    கோயில் அழகல்லவோ!

கல்யாணி உமையே! மகன்
காண வேண்டும் உனையே!!

பாடிடும் பாலன் தாமரைக் கழலில்
       பணிந்திடும் நாள் வருமோ? - என்
  பழவினை மாயப் பவவினை தீரப்
       பளிச்சிடும் நாள் வருமோ?
கூடிடும் நின்றன் ஜோதியில் ஜ்வாலை
       குலவிடும் நாள் வருமோ? - அடி
  குங்குமக் காரி மங்களத் தேரில்
       குடிபுகும் நாள் வருமோ?

வீதியில் வீசும் தென்றலைக் கேட்டேன்
       விந்தைகள் நீயென்றது! - பல
  வீணைகள் செய்திடும் ஓசையைக் கேட்டேன்
       வித்தையும் நீயென்றது!
ஆதியைக் கேட்டேன் அந்தந்தைக் கேட்டேன்
       அது கடந்தாள்பவளே - எனை
  அணைத்திடும் காலம் நின்றனைக் கேட்பேன்
       அதையுடன் சொல்லுகவே!

நான்வரும் நேரம் தாயெது செய்வாய்
       நல்லிதழ் விரிப்பாயோ ? - என்
  நடிப்புகள் தீர நாடகம் சேர
       நயனம் திறப்பாயோ?
வான்தரும் மாரி வருவதைக் கண்டால்
       வனமயில் ஆடாதோ? - நின்
  வனப்பினைக் காண வாய்திறந் தாவி
       வாழ்த்தினைப் பாடாதோ!!

அம்மா!
கல்யாணி உமையே! மகன்
காண வேண்டும் உனையே!!

-விவேக்பாரதி
02.12.2017 


பாடல் : கவிமாமாணி க ரவி 
 

Comments

Popular Posts