வார்த்தையும் வாழ்க்கையும்


கூட்டங் கூட்டமாய்க் குதூகலமாய்ப்
பாட்டுப் பாடுவோம் பரவசமாய்
இல்லை துயரில்லை கவலையிலை 
எல்லை வெளியெல்லை வானமெல்லை! 

சின்னத் துளியோடு மனம்வைத்து 
ஜன்னல் காற்றோடு தலைசாய்த்துத் 
தூங்கிப் போய்விடவும் ஆசைகளே
நாங்கள் மண்ணுக்குள் பறவைகளே

யாரும் காணாத காட்சியெலாம்
காணும் கண்கொண்டு வந்துவிட்டோம்
போரும் புயல்மழையும் தென்றலுமே
பொறியின் விளையாட்டு இயந்திரமே

நிலவு கற்பிக்கும் ஓசையிலும்
மலர்கள் ஒப்பிக்கும் பாஷையிலும்
கலந்து கவிபாட எண்ணிவிட்டோம்
கடவுள் குழுவோடு வந்துவிட்டோம்

நிழலும் இல்லாமல் இடமுமில்லை
நீரும் இல்லாமல் வளமையிலை
விழலும் இல்லாமல் பாடமில்லை
வார்த்தை இல்லாமல் வாழ்க்கையிலை! 

-விவேக்பாரதி
26.12.2017

Comments

Popular Posts