சொல்லொன்று வேண்டும்

சொல்லொன்று வேண்டும்! சொல்லொன்று வேண்டும்!
    சோதனை தீர்க்கின்ற சொல்லொன்று வேண்டும்!
அல்லவை மாய்க்கின்ற சொல்லொன்று வேண்டும்!
    அடையாளம் காக்கின்ற சொல்லொன்று வேண்டும்!
நில்லாமல் ஓடிடும் நிலையற்ற வாழ்விலே,
    நிஜம்சொல்ல நிழல்சொல்லச் சொல்லொன்று வேண்டும்!
சொல்லொன்று வேண்டும்! சொல்லொன்று வேண்டும்!
   சோகங்கள் தேய்க்கின்ற சொல்லொன்று வேண்டும்!

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்!

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்!
 
மின்னலைப் போலிங்கு சொல்லொன்று வேண்டும்!
    மீறிடும் குளிரோடும் சொல்லொன்று வேண்டும்!
கன்னலைப் போலவும் சொல்லொன்று வேண்டும்!
    கனல்போல வளிபோலச் சொல்லொன்று வேண்டும்!
இன்னலை இல்லாமல் ஆக்கும்சொல் வேண்டும்!
    இயலாமை தனையிங்கு போக்கும்சொல் வேண்டும்!
மன்னவர்க் கஞ்சாத சொல்லொன்று வேண்டும்
    மரியாதை மாறாத சொல்லொன்று வேண்டும்!

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்!

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்!
 
அச்சொல்லை யார்சொல்வ தென்கின்ற பேச்சே
   அமையாமல் யாவர்க்கும் பொதுவாக வேண்டும்!
அச்சத்தை நீக்கினோர் அடிநெஞ்சில் மூளும்
    அக்கினிச் சுடர்கொண்ட சொல்லொன்று வேண்டும்!
உச்சத்தைக் கண்டாலும் வீழ்ந்தாலும் எண்ணம்
    உருவத்தை இழக்காத சொல்லொன்று வேண்டும்!
அச்சொல்லைச் சீக்கிரம் தாஜெகத் காளி
    அறிவோடு முறவாடும் சொல்வீசு காளி!

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்!

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்!
 
-விவேக்பாரதி

27.08.2017

Comments

Popular Posts