ஆசை ஆசை ஆசைதான்

நிலவாய் இருக்க ஆசைதான் - ஆனால்
   நிழலாய்த் தேயப் பிடிக்காது!
மலராய் இருக்க ஆசைதான் - ஆனால்
   மறுநாள் வாட முடியாது!

செடியாய் இருக்க ஆசைதான் - இடம்
    சேர்ந்து வாழத் தெரியாது!
படியாய் இருக்க ஆசைதான் - ஏற்றும்
   பக்குவம் எனக்கே தெரியாது!

முள்ளாய் இருக்க ஆசைதான் - ஆனால்
   மறைந்து குத்தத் தெரியாது!
புள்ளாய்ப் பறக்க ஆசைதான் - ஆனால்
   பூமியில் வழிகள் கிடையாது!

கற்பனை ஆகிக் கரையவும், - வரும்
   கருத்துகள் ஆகி உரையவும்,
சொற்பதம் ஆகிச் சுடரவும், - மழைச்
   சொட்டுகளோடு அலையவும்,

ஆசை ஆசை ஆசைதான் - ஆனால்
   அமைக்கும் உத்தி தெரியாது!
ஓசை பாடல் கவிதையாய் - மனம்
   ஒன்றி விட்டால் வலியேது ??

-விவேக்பாரதி
19.08.2017

Comments

Popular Posts