லக்‌ஷ்மி - குறும்பட நாயகி

ஏதேதோ பேசுகிறார்கள்! அவளை நானும் கண்டேன்! அவளை எனக்குக் காட்ட உதவிய பாரதி வரிகளிலும் சரி, அந்தப் பட அமைப்பிலும் சரி, எந்தவொரு பிசிரும் நான் காணவில்லை! சாதாரன குறும்படத்தைப் பெரிதாக்குகின்றார் என்றும் அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப விமர்சிக்கின்றனர் என்றும் என் இளைய சமூகம் போடும் பதிவுகளைக் கண்டு முதலில் உதாசீனப் படுத்தினாலும், அவள் நிலையைக் கொஞ்சமாவது புரியவைக்க வேண்டுமென்ற மன ஏக்கம்...இப்படி வெளிப்படுகிறது!

இவள்தான் லக்‌ஷுமி!

காதல் தேடும் பெண்மணி
    கலவி கண்ட கண்மணி
நீதமற்ற செய்கையால்
    நிம்மதி இழந்தவள்
வீதி வந்த நெஞ்சினை
    விரகம் கண்ட உண்மையைச்
சேதியாக்கி சொல்லிய
    செம்மை இந்த லக்‌ஷுமி!

மணமுடித்த ஆணிடம்
    மனத்தை எதிர்பார்த்தவள்
குணமிருந்தது ஆதலால்
    கும்மிருட்டில் வாழ்ந்தவள்
இணைப்பு மட்டும் கண்டவள்
     இதயம் தேடி நின்றவள்
அணைக்க வந்த தோளிலே
    அசந்து போன லக்‌ஷுமி!

இருட்டிலே நடப்பதை
    இங்கெடுத்துச் சொல்லியே
விருப்பமற்ற பேர்களால்
    வசையும் ஏச்சும் பார்ப்பவள்!
ஒருத்தி அல்ல லக்‌ஷுமி
    உணர்வு தேடும் நிழலிலே
திருப்தி தன்னைக் கண்டிடாத்
    திசைகள் தோறும் லக்‌ஷுமி!

குற்றமற்ற ஆளெனக்
    குவலயத்தில் யாருளார்?
உற்ற ஆணின் மீறலை
    உணர்ந்திடாத வர்க்கமே,
இற்றுப் போன ஆடையை
    இறுக்கும் ஊசி தேவையே!
பற்றிலாத கூடலால்
    பதைத்த நெஞ்சள் லக்‌ஷுமி!

நிமிர்ந்த நடையைத் தாங்கினாள்
    நிலத்தில் அஞ்சவில்லை தான்
அமிழ்ந்த நெஞ்சம் கொண்டதால்
    அனைத்தும் தாங்கி நின்றனள்!
அமைந்த வாழ்க்கை நரகிடை
    அவளுக்கு உற்ற சொர்க்கமாய்க்
கமழ்ந்த மார்பில் சாய்ந்தனள்
    கவிதை மர்மம்! லக்‌ஷுமி!!

-விவேக்பாரதி
09.11.2017

Comments

Popular Posts