கர்ணன்

சூரியப் புத்திரன் துரியனின் மித்திரன்
       சூதுவா தறியா தவன்!
   சூழ்ச்சியில் வென்றிடத் தெரியாத நாயகன்
       சொன்னசொல் மீறா தவன்!
வாரிக் கொடுத்திடும் வள்ளமை கொண்டவன்
       வல்லவன் வில்லின் வீரன்!
    வாய்மை தெரிந்தவன் தீதென் றறிந்துமே
       வாய்பொத்தி நின்ற தோழன்!
பேரண னாகிடும் கவசத்தைப் போர்முன்னம்
       பெரிதிலை எனவிட் டவன்!
   பெருமைமிகு குடியிலே பிறந்தாலும் அறியாது
       பேதையைப் போல்பட் டவன்!
தூரிகை இடையினள் துரியனின் மனைவியைத்
       தோழியாய் நினைத்த தீரன்
   தோன்றிடும் பாரதக் கதையிலே கண்ணனைத்
        தொழவைத்த திந்தக் கர்ணன்!!


-விவேக்பாரதி 
30.08.2017

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி