ஆசிரியர் தின வாழ்த்து

மனவயலை உழுகின்ற மாண்புடைய ஆசிரியர்
    மண்ணில் வாழ்க!
கனவுகளைக் கண்டறியக் கல்வியெனும் நூல்கொடுத்துக்
    காற்றில் ஏற்றித்
தினமுமொரு சாதனைகள் படைக்கின்ற வல்லவரின்
    திறமைக் கெல்லாம்
முனைப்பைக் கொடுக்கின்ற முழுமைமிகு ஆசிரியர்
    முயற்சி வாழ்க!

திரிமீதில் அறிவென்னும் சுடரேற்றிக் காய்கின்ற
    திணவு கொண்டார்!
சரியாது தவறேது சகலங்கள் கற்பித்தல்
    தனைய றிந்தார்!
விரிவாக மௌனத்தின் விசையாகப் பாடங்கள்
    விளைத்து ரைக்கும்,
பெரிதான சக்தியெனும் ஆசிரியர் பல்லண்டு
    பெருத்து வாழ்க!

கொற்றவனும் மற்றவனும் போற்றிடவே அறிவென்னும்
    கொடைய ளித்துக்,
கற்றவர்கள் உயர்வடையக் கண்கொண்டு கண்கொண்டு
    கண்டு கண்டு,
பெற்றடுவார் பேருவகை அன்னாரின் நெஞ்செலெழும்
    பெற்றி வாழ்க!
உற்றுவரும் பூம்புனலாய் உளக்கிடுக்கை செழிப்பாக்கும்
    உயர்ந்தோர் வாழ்க!

ஐயங்கள் பாடங்கள் அவைதீரத் தெளிவாக
    அறிவிற் சொல்லி,
பொய்யெங்கும் இல்லாத புகழ்மேவும் வாழ்க்கைக்குப்
    புதுமை செய்து,
கையென்னும் செல்வத்தின் மதிப்போடு வல்லமைகள்
    கற்றுத் தந்தே,
உய்வெங்கும் நேர்கின்ற வழிசெய்யும் உத்தமர்கள்
    உலகில் வாழ்க!

-விவேக்பாரதி

05.09.2017

Comments

Popular Posts