வழி மறந்த பயணங்கள்

பைந்தமிழ்ச்சோலைக் கவியரங்கில் வாசிக்க எழுதிய கவிதை

வந்தவழி எந்தவழி செல்லும்வழி என்னவழி
   வந்ததுவும் ஏனிந்த ஊரில் - இதன்
   வாய்மைநிலை சொல்லுவர்யார் பாரில் - ஒரு
சொந்தவழி ஏதுமிலை சூத்திர மறிந்ததுபோல்
   சொந்தபந்தம் சொல்வதெலாம் நாடி - அதைச்
   சோதிக்கா தோடுகிறோம் தேடி !

முன்னவரும் சொன்னவழி முற்றிலுமு கந்தவழி
   மூளையிலே இந்நினைவைத் தேக்கி - நாம்
   முந்துகிறோம் நேரமதைப் போக்கி - அவர்
சொன்னவழி உண்மைதனைக் கண்டுணர வேண்டுமதைச்
   சோதனைகள் செய்திடுதல் வேண்டும் - அதன்
   சோதனையா லேபிறவி தாண்டும் !

பெற்றவரும் உற்றவரும் காசுபணம் கூடிவரப்
   பெற்றிடிலோ வந்துவந்து பார்ப்பார் - பணப்
   பேயடிக்கக் கூட்டத்துளே சேர்ப்பார் - செல்வம்
அற்றெளிமை யாகிவிடில் அல்லலுறும் வேளையிலும்
   அற்பமெனும் குப்பையெலி என்பார் - நமக்
   கறிவுரைகள் சொல்லியவர் திண்பார் !

கூடியுறும் வாழ்க்கையிலே கோடிநலம் வந்ததெனும்
   கூற்றினை வெறுக்கவழி செய்தார் - அதில்
   கூடிவந்தோர் வாழ்வுகளைக் கொய்தார் - இவர்
நாடிவரும் வேளையிலே நல்லவரைப் போல்நடித்து
   நாசமாகப் பாழுங்குழி தூர்ப்பார் - நம்
   நல்லநிலை கண்டவுடன் வேர்ப்பார் !

சூதுகளும் வாதுகளும் சூழ்ந்திடா வுறவுவெள்ளம்
   சுற்றிவர வாழ்க்கைப்பயிர் காய்க்கும் - அடச்
   சுந்தரமாய் இன்பமலர் பூக்கும் ! - இதன்
போதனையே வந்தவழி போகையிலி தைமறந்து
   போவதனால் லாபமெதும் இல்லை - இவை
   போனவர்கள் போட்டுவைத்த எல்லை !

-விவேக்பாரதி
04.09.2017

Comments

Popular Posts