சொந்த அநுபூதி

ஓடும் பொழுதில் ஒதுங்கா தலையும்
நாடும் நலமே விடு(ம்)நா ளுமெதோ?
கூடும் பழிபொய்க் குணமே அகலப்

பாடப் பெறு(ம்)நாள் பகர்தற் குறுமோ?


உறுமோ செழுமை? உயரம் வருமோ?
அறிவுக் கதிதான் அடையப் பெறுமோ?
செறிவும் துணிவும் செழுமைக் குணமும் 

பிறவிக் குயர்வாய்ப் பிழைபோக் கிடுமோ?

போக்கும் பொழுதும் பயனுள் ளதுவாய்,
ஆக்கம் விளையும் அமைவுற் றதுவாய்,
வாக்கும் மனமும் வளமே புனையும்,

நோக்கம் பெறுநாள் நுவலற் கரிதோ?

அரிதோ உலகில் அமைதிக் கடல்தான் 

பெரிதா யலைவீ சிபெருத் தலுமே?
சரியா கியநல் வழிசேர்ந் திடுமேல்
அரிதா கியவை அமையா தறுமோ?

அறுமோ அறிவீ னமுமே? உலகம்
பெறுமோ அமரப் பெயரும் புகழும்?

நிறைவா யுளமாந் தரினத் தவரே
அறிவோ மெனில்வா னு(ம்)வசப் படுமே!!

-விவேக்பாரதி
02.11.2017

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி