நடிப்புச் சான்றோர்கள்

உண்மை நிலையென்று சொல்லவந்தார் - எது
    உண்மை எனுங்கதை யாரறிவார்?
பெண்மை உயர்வெனப் பேசவந்தார் - அவர்
    பெண்ணின் துயர்கள் அறிந்தாரோ?
கண்ணை மூடிக்கொண்டு வாழ்ந்திடுவார் - பிறர்
    கருத்தை ஒருபோதும் சிந்தைசெய்யார்
பண்டு நிகழ்ந்தவப் பழங்கதையே - மிகப்
    பவித்திரம் என்றிவர் சொல்லிவைப்பார்!!

சாத்திர மென்னும் நதியின்மிசை - சிலச்
    சாக்கடைக் குப்பைகள் சேர்த்துவைத்தே
மாத்திரை போல அதைவிழுங்கிச் - சிலர்
    மண்மிசை வாழ்க்கை நடத்திடுவார்!
சாத்திரம் என்ப தெவரறிந்தார்? - அதன்
    சாரத்தின் உண்மை அறிந்தாரோ?
சாத்திரம் வாழும் வழிமுறையாம் - இச்
    சங்கதி யேனும் அறிவாரோ?

பின்னும் புதுமைகள் பேசிடுவார் - அதில்
    பீழை இருப்பதைக் கண்டுகொள்ளார்!
எண்ணும் படிக்கிங்கு யாவருமே, - மேல்
    ஏறிப் பலகதை தானுரைப்பார்!
தன்னை நிறுத்திட எண்ணிடுவார் - மெய்த்
    தன்மை தனையெண்ணும் சிந்தையிலார்
என்றும் புகழொலி ஓதிடுவார் - அவர்
    ஏத்திக் கிருத்திகள் பாடிடுவார்!

சேரும் பயனொன்றில் சிந்தனையாய் - விசை
    சேர்க்கும் முயற்சியில் நின்றிடுவார்
தீரும் பயனெனில் நிச்சயமாய்த் - தன்
    திறனை ஒளிக்க தயக்கமிலார்
நேரத்திற் கேற்ற நெளிவுடனே - தினம்
    நல்லுப சாரம் நிகழ்த்திடுவார்
யாருக்கு மேதலை சாய்த்திடுவார்! - கரும்
    யாம நிறத்தில் உளம்படைத்தார்!

கற்றது நான்கு கதையெனினும் - நன்கு
    காதினில் பூக்களைச் சுற்றிநிற்பார்
பெற்றவை யாவும் செலவழித்தும் - புகழ்
    பெற்றிட எண்ணம் இயற்றிநிற்பார்!
மற்றவர்க் காக உதவியென்றால் - கொடும்
    மணியை நேரத்தைக் காட்டிக்கொண்டே
வெற்றுப் பொய்களைச் சொல்லிடுவார் - இவர்
    வெல்லும் நடிப்புச் சான்றோர்களே!!

-விவேக்பாரதி
02.12.2017

Comments

Popular Posts