ஐயப்பனே ஆதரவு


சபரி அருட்கிரி வாசனை எண்ணிடச் 
சஞ்சலம் தங்கிடுமோ? - மனமே 
அபய மென்றவன் ஆசைப் பெயர்சொல
அச்சம் நெருங்கிடுமோ?

பாவரின் தோஅனைப் பந்தள ராசனைப் 
பார்வையிற் கொண்டுவிட்டால் - ஒரு 
தாபம் நெருங்குமோ? தர்க்கம் நிகழுமோ
தைரியங் கொள் மனமே! 

மணிகண்ட ரூபனை மகிஷிசம் ஹாரனை 
மதியில் வைத்துவிட்டால் - பொய்ப்
பிணிகளும் அண்டுமோ? பிழைவரக் கூடுமோ?
பிழைத்திடுவாய் மனமே! 

வன்புலி வாகனன் வனத்தில் வசிப்பவன் 
வழியைத் தொடர்ந்துவிட்டால் - உன்னில் 
வன்மை பெருகிடும் வாழ்வு சிறந்திடும் 
வழிபடுவாய் மனமே! 

ஐயப்ப தேவனே ஆதரவானவன் 
அண்டிடுவாய் மனமே - இனி 
ஐயங்கள் இல்லை துயரில்லை சன்னிதி
ஆனந்தமே தினமே!! 

-விவேக்பாரதி
21.12.2017

Comments

Popular Posts