மேடை மிச்சம்

ஆங்காங்கே கொடிபிடித்தும், கோஷம் போட்டும்,
    அவரவர்கள் வாய்கிழியப் பேசித் தீர்த்தும்,
தாங்காத சத்தங்கள் செய்து கொண்டும்,
    தகாதமுறை வாசகங்கள் ஏந்திக் கொண்டும்,
நீங்காத பழிசேரும் வண்ணம் தோற்ற
    நிழல்போன்ற பொம்மைதனைப் பின்பெ ரித்தும்,
வாங்காக்கள் பறைமுழக்கம் எதிரொலித்தும்,
    வழக்கம்போல் நடந்தொரு போராட்டம் தான்!

அந்நிகழ்வில் ஒருவனெழுத் தரசைச் சாட,
    அடுத்தொருவன் அதைநடத்தும் அதிகா ரத்தை
வன்முறையாம் அரசென்று வழியும் கூற,
    வந்தவர்கள் பின்புறத்தில் ஆமாம் போட,
இன்னொருவன் அடுத்துண்ணா விரதம் என்ன,
    இனிதுளிநீர் யாமுண்ணோம் என்றே சொல்லப்,
பின்னொருவன் வெற்றிலைவாய் குதப்பி நிற்கப்,
    பிழைத்துபார் போராட்டம் தெருவில் அங்கே!

மறுபுறத்தில் கருஞ்சட்டை கையின் கம்பில்
    மாட்டியபல் வாசகங்கள் ஏந்தித், தோன்றும்
உருவுதனில் மாணாக்கர் போலே தோன்றி
    ஊரழிக்கும் கூடமொன்று கோஷம் போட,
மறதிகள்போல் இளைஞர்கள் நகர்ந்து செல்ல,
    மாறாத ஊழல்பேய்ப் பிடித்த வர்கள்
ஒருபொட்ட லச்செலவில் ஆட்கள் சேர்க்க,
    ஒருவாறு நடந்ததந்த போராட்டம் தான்!

போராட்டம் எதற்கென்று கடையில் கத்தும்
    போராளி ஒருவனிடம் கேட்கப் போனால்,
"காரோட்டம் ஏனென்று அறிவா யாநீ?
    கழகத்தின் போராட்டம் அவ்வா றென்றே"
நீரோட்ட வெள்ளமெனத் திரண்டி ருந்த
    நீசருளே நீசரெனச் சேர்ந்து கொள்ளச்,
சீரோட்டம் இல்லாத மதியர் செய்த
    சீர்கெட்ட போராட்டம் நிகழ்ந்த தங்கே!

எதற்கிங்கே கத்துகிறோம்? என்றும் எண்ணா
    தெங்கிருந்தோ வந்தவர்கள் எவையெல் லாமோ
விதவிதமாய்க் கத்திபல கோஷம் போட்டு
    வீதிகளில் மேதிகள்போல் உலவ, அந்தச்
சதியெல்லாம் நீங்கிவிட எழுந்தான் ஒற்றைச்
    சாணக்யன்! வாள்நீட்டிப் போராட் டத்தின்
விதியெல்லாம் மாற்றுகவென் றாணை இட்டான்
    வீதிகாலி ஆனதன்பின் மேடை மிச்சம்!!

-விவேக்பாரதி
09.11.2017

Comments

Popular Posts