பாரதி திருவிழா அழைப்பு

வருடா வருடம் மகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவரது இல்லத்தில் நிகழும் "பாரதி திருவிழா" வுக்கு எழுதிய அழைப்புக் கவிதை.

அதிசயக் கவிஞனின் அற்புதத் திருவிழா
   ஆனந்தம் சேரட்டுமே! - நம்
   ஆர்ப்பரிப் பாகட்டுமே! - புது
விதிசெய்த கவிஞனின் வித்தாரத் திருவிழா
   வீதிகள் கூடட்டுமே! - நாம்
   விளையாடிப் பாடட்டுமே!

சதிசெயும் ஜாதியைத் தீயிட் டெரித்தவன்
   சாத்திரம் புதிதாக்கியே - பழஞ்
   சங்கதி களைந்தானவன்! - நல்ல
ஜதிசெயும் பல்லக்கின் ஊர்வலம் திருவிழா
   ஜனத்தொகை தேங்கட்டுமே! - அவன்
   சரணங்கள் ஓங்கட்டுமே!

முண்டாசுக் கவிஞனைக் கொண்டாடும் நல்விழா
   முழுநாள் இருக்க வாரீர்! - பொன்
   முறுவல்கள் ஏந்தி வாரீர்! - தானும்
வண்டாகி தேசத்தை மலராகப் பார்த்தவன்
   வாழ்க்கையைப் பார்க்க வாரீர்! - அவன்
   வாக்குகள் கேட்க வாரீர்!

திண்டாட்டம் நீக்கியே கொண்டாட்டம் இட்டிடத்
   திரளாய்த் திரண்டு வாரீர்! - அந்தத்
   தினம் நோக்கி ஓடி வாரீர்! - அங்கு
அண்டத்துத் தேவரும் காளியும் புடைசூழ
   அவன்கூட வந்து நிற்பான் - அந்த
   அவதாரம் காண வாரீர்!!

-விவேக்பாரதி
23.11.2017

Comments

Popular Posts