உன் இஷ்டம்

என் நண்பன் எழுதி அனுப்பிய முதல் நான்கு வரிகள் தூண்டிய கவிதை...

காய்ச்சலாக நீயும் வந்தால்,
நோயில் படுத்திடுவேன்!
கவிதையாக நீயும் வந்தால்,
கம்பன் பிறவி எடுத்திடுவேன்!

வானமாக நீயும் வந்தால்,
வட்டநிலா நான் ஆவேன்!
வெய்யிலாக நீயும் வந்தால்,
வேண்டும் மண்பானை ஆவேன்!

கடலாக நீயும் வந்தால்,
காற்றாய் வந்து அலைதருவேன்!
சுவாசமாக நீயும் வந்தால்,
மூக்காய், உன்னால் உயிர் வளர்வேன்..!.

உயிரென நீயே வந்தால்,
உன்னால் இயங்கும் உடல் ஆவேன்!
 குழப்பமாய் நீயும் வந்தால்,
குழப்பச் சேற்றில் மலராவேன்!

கற்பனைப் பெண்ணாய் வந்தால்,
கதையாய் எழுதும் கோல் ஆவேன்!
அதிசய சிந்தனையாக வந்தால்,
அதிலே வாழும் புழுவாவேன்!

உன் உடலுக்கு நிழலாவேன்,
உன் உணர்வுக்கு விருந்தாவேன்!

உன் கொஞ்சலுக்குப்
பிள்ளையாய்க்,
கோல அதட்டலுக்கு
அடிமையாய்,
அறியாமைக்குத் தாயாய்,
இன்பத்திற்குச் சாவியாய்,

கனவாய்,
நனவாய்க்,
காட்சியாய்
நான் ஆவேன்...

வருவதும் வராததும்
உன் இஷ்டம் தோழி..!
நீ மௌனமாக வந்தாலும் சரி, 
காத்திருக்கும் காலம் ஆவது
நானே நான் தான்!!

-விவேக்பாரதி
16.12.2017

Comments

Popular Posts