இரவில் சூரியன்

மகாகவி பாரதி நினைவுநாள்!!

இரவில் ஒரு சூரியன்
   இருளகற்றச் சேர்ந்தது!
பரவும் அதன் ஜோதியோ
   பாடலாக வாழுது!!

முண்டாசுக்குள் மூண்டெழும் எண்ணம்
    எத்தனை யோசனை தூரம்? - அதை
    எவர்தான் சொல்லக் கூடும்? - வெடி
குண்டாகும் அவன் பார்வைக்குள்ளே
    எத்தனை தெய்வங்கள் வாழும் ? - அட
    யாரறிவார் அதன் ஆழம்?

கல்லிலும் கனலிலும் கடவுளைக் கண்டவன்
    கடவுளாயினான் இன்று - அவன்
    கவிதையாயினான் நன்று! - பல
அல்லிலும் பகலிலும் எழுதிய கைகளும்
    அமைதியாயின இங்கு - அவை
    ஆதி பராபரை சங்கு!

பாட்டுப் பாடவே பார்மிசை உதித்த
    பகலவன் மூழ்கிய மாலை - விழிப்
    பாற்கடல் மீதலை ஜ்வாலை! - இந்த
நாட்டுக்காகவே நாளும் பேசிய
    நாவுக்கு முடிந்தது வேளை - இனி
    நமக்கென் றானதவ் வேலை!!

-விவேக்பாரதி

10.09.2017

Comments

Popular Posts