எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பை எண்ணாத நெஞ்சம் இல்லை!
   எல்லோரும் எதிர்பார்க்காது இருப்பதில்லை!
புதிர்போட்டுச் செல்கின்ற வாழ்க்கை ஓட்டம்
   புரியாமல் ஓரிடத்தில் சிக்கிக் கொள்ளும்
விதமான மனத்தில்தான் இந்தக் கேள்வி!
   விளையாடல் செய்திருக்கும்! வாழ்வோடு ஓட
நிதம்நூறு வழிதேடி ஓடுவோர்கள்
   நிஜம் இதனை நினைக்காது வாழ்ந்திருப்பார்!

எல்லாரும் ஒவ்வொன்றை எதிர் பார்த்துத்தான்
   எப்போதும் நகருவது உலக வாழ்க்கை!
நல்லார் என்றால் நட்பை எதிர் பார்கின்றோம்!
   நலிந்தோர்கள் விலகுவதை எதிர் பார்க்கின்றோம்!
வல்லார் என்றால் வினையை எதிர் பார்க்கின்றோம்!
   வயதுக்கோ  இன்பத்தை எதிர் பார்க்கின்றோம்!
நில்லாமல் ஓடுமிந்த வாழ்க்கை ஓடம்!
   நிகழ்வதிலே எதிர்பார்ப்பு சுழல்கள் ஆகும்!

-விவேக்பாரதி
18.08.2017

Comments

Popular Posts