நாட்டுத்தாய்ப் பிள்ளை

மதத்தின் சார்பற்ற நாடு - வெறும்
மனங்களுக்குள் என்ன கோடு?

முத்து மாரியம்மன் கோயிலுக் கண்டையில்
    முஸ்தப்பா தங்கிடலாம்! - இங்கு
புத்த பிக்‌ஷுகளை சேவியர் தம்வீட்டில்
    புகுத்திக் காத்திடலாம்!
சுத்த பிராமணர் சீக்கியர் சப்பாத்தி
    சுவையைக் கண்டிடலாம்! - அவர்
தத்தம் மதங்களைப் போற்றி பிறவற்றைத்
    தாமும் மதித்திடலாம்!

இது
மதத்தின் சார்பற்ற நாடு - வெறும்
மனங்களுக்குள் என்ன கோடு?

கிறித்து பிறந்ததும் புத்தன் வளர்ந்ததும்
    கிருஷ்ணன் புகன்றதுவும் - நல்
அறத்தை வளர்த்திடத் தானென்பதை நாம்
    அறிந்திட வேண்டுமன்றோ!
புறத்தின் அழுக்கினை நீரகற்றும் நெஞ்சம்
    பூணும் அழுக்கையெல்லாம் - இங்கே
அறுத்தெ றிந்திட ஆன்ம இயலெனும்
    அன்பைப் புனைந்திடுவோம்!

இது
மதத்தின் சார்பற்ற நாடு! - வெறும்
மனங்களுக்குள் என்ன கோடு?

வீட்டி லொருபிள்ளை சோற்றை விரும்பிடும்
    மற்றொன்று இட்லியெனும்! - ஒன்று
காட்டும் கடைப்பண்டம் கொண்டிடும் மற்றொன்று
    கனியில் பசிதணியும்!
ஊட்ட உணவுகள் வேறெனினும் எல்லாம்
    ஊட்டுவ தன்னையன்றோ! - இந்த
நாட்டில் விருப்பங்கள் கோடிவந்தா லும்நாம்
    நாட்டுத்தாய்ப் பிள்ளையன்றோ!!

-விவேக்பாரதி
16.11.2017

Comments

Popular Posts