ஜ்வாலைப் பூச்சொறி

அனைவருக்கும் இனிய கிறித்துமஸ் தின வாழ்த்துகள்

ஆவினங்கள் பாட்டிசைக்கும் அன்பின் தோட்டத்தில்
   ஆண்டவனார் அவதரித்தார் குழந்தை ரூபத்தில்
பாவமெல்லாம் தீர்க்கவந்த ஏசு வாகினார்
   பார்முழுதும் இன்பமுறத் துன்பம் தாங்கினார்!
தேவதைகள் ஆர்ப்பரிக்கும் அழகு ராத்திரி
   தேவனவன் தொழுவத்திலே வந்த ராத்திரி
காவல்களும் கவலைகளும் காற்றில் தீரவே
   கர்த்தருமு தித்துவந்த கிறித்து ராத்திரி!

இது கிறித்து ராத்திரி!
எங்கும் ஜ்வாலைப் பூச்சொறி!

கன்னிமேரி யம்மைபெற்ற கருணை பாலகன்
   காவியங்கள் போற்றவந்த கர்ம நாயகன்
அன்பின்வழி ஆதரித்த அறிவு தெய்வதம்
   ஆற்றல்மிக கொண்டமன வலிமை வீரியன்
மன்னவனும் தாமெதிர்க்க அஞ்சி டாதவன்
   மாசுடைய வஞ்சகர்க்கும் நன்மை செய்பவன்!
இன்னமுதப் பிறையொளியில் வந்து தித்தநாள்
   இருள்விலக்கும் ஜோதியென இடர் மிதித்தநாள்!

இது கிறித்து ராத்திரி
எங்கும் ஜ்வாலைப் பூச்சொறி!

அப்பத்தோடு ஞானம்தந்த ஏசு வந்தநாள் 
   அகிலமெலாம் ஆர்ப்பரிக்கும் உலக சொந்தநாள்
செப்புமறை உண்மையெலாம் எடுத்துச்    சொல்லவே
   ஜெகன்மாதா தந்தநிழல் தோன்றி நின்றநாள்!
எப்பொழுதும் அன்புசெயல் அறிவில்    தேருதல்,
   ஏட்டறிவும் நூலறிவும் இதய பாசமும்
தப்பாத மானிடராய் வாழத் துவங்குவோம்
   தரைவந்த ஏசுபிரான் நெஞ்சில் தோன்றுவார்!!

ஆம்,
இது கிறித்தும ராத்திரி
எங்கும் ஜ்வாலைப் பூச்சொறி!!

-விவேக்பாரதி
25.12.2017

Comments

Popular Posts