வாழிய பாரத மணித்திரு நாடு

பாட்டை எடுத்துநீ பாடு - வாழிய
பாரத மணித்திரு நாடு!

ஈட்டிய விடுதலைத் தாகம் - எங்கும்
   இயக்க வீரப்ர வாகம் - பலன்
காட்டும் தொழிலுடை வீரர் - நல்ல
   கலைகள் புனைந்திடும் சூரர் - விண்
நாட்டவர் கொண்டிடும் செல்வம் - இந்த
   நானில மேபுகழ் செல்வம் - வந்து
மீட்டும் இசை,கவி, யோகம் - ஒளி
   மின்னும் உயர்நெறி வேதம், - செவி

எங்கும் சமத்துவப் பேச்சு - சக்தி
   எழிலை நினைத்திடும் மூச்சு - புகழ்
பொங்கும் இயல்புடை மக்கள் - எனப்
   போகம் பலவுமிங் கெய்த - அருட்
தங்கத் தடாதகை அன்னை - எங்கள்
   தாரக பாரத தேவி, - கொண்ட
அங்கத் தெழிலினைப் பாடு - நிதம்
   ஆடிக் கொண்டேஜதி போடு! (ஆ)

பாட்டை எடுத்துநீ பாடு - வாழிய
பாரத மணித்திரு நாடு!

வீர மராட்டியர் ஆண்மை - பஞ்சாப்
   விந்தையர் கொண்டிடும் கேண்மை - அன்பு
சாரும் வங்காளத்துச் சொந்தம் - நல்ல
   சந்தத் தெலுங்கரின் பந்தம் - உயர்
தீரத் தமிழரின் மாண்பு - உரு
   திண்ணமென் றேயவள் கொண்டாள் - எழில்
பாரத் துடையவள் அன்னை - எங்கள்
   பாரத தேவியைப் போற்றி - இந்த

எட்டுத் திசைதரும் பாட்டு - வரும்
   ஏழிசை நாதத்தின் கூட்டு - எனக்
கொட்டும் கலைமணி சேர்த்து - அவள்
   கோல எழில்தனை வார்த்து - மனம்
தட்டி இசைதர வேண்டும் - அவள்
   தன்மை வெளிப்பட வேண்டும் - என
இட்டுக் கும்மியடித் தாடு - நம்
   இந்துஸ் தானத்தைப் பாடு! (ஆ)

பாட்டை எடுத்துநீ பாடு - வாழிய
பாரத மணித்திரு நாடு!!

ஒற்றுமை என்பது மந்த்ரம் - நமை
   உயரத் தியக்கிடும் எந்த்ரம் - அதைக்
கற்றுத் தெளிவுறல் வேண்டும் - நம்
   கடமை அறிந்திடல் வேண்டும் - களி
உற்றுப் புகழ்பல சொல்லி - இவ்
   உலகம் துதித்திட இந்த்யா - திறம்
பெற்றுத் திகழ்வது கண்டு - ஆடிப்
   பேரிகை கொட்டுவம் கொண்டு! - நமைச்

சித்தத் தெளிநிலை ஆளும் - நாடும்
   ஜீவனும் ஒன்றரக் கூடும்! - அந்த
முத்துத் தருணத்தில் நாவில் - வந்து
   மூள்வது வந்தே மாதரம்! - அதன்
சத்தியத் தால்வலி கொள்வோம்! - பொய்ச்
   சாதி அழுக்கினைக் கொல்வோம்! - இதை
நித்தம் மனதுக்குள் ஓது - என்றும்
   நீடூழி வாழிய நாடு!! (ஆம்)

பாட்டை எடுத்துநீ பாடு - வாழிய
பாரத மணித்திரு நாடு!!

-விவேக்பாரதி
11.12.2017

Comments

Popular Posts