தெருவில் சுவைஞன்

என் பாட்டுக்குள்ளே
பாற்கடல் தோன்றி
பசியைப் போக்க முற்படும்!
என் எழுத்துக் கூட்டம்
வான்முகில் ஆகி
எந்தப் பொழுதும் மழைதரும்!

ஒரு வேட்டுச் சத்தம்
கேட்டால் கூட
வேகச் சந்தக் கவிவரும்!
இவை யாராலே?
உமை பேராலே
என எண்ண எண்ணச்
சுகம்வரும்!

காட்டருவிக்கும்
கால்கள் கொடுத்து
நடக்கச் சொல்வேன்!
வானலையும் காக்கைக்கும்
மறை குயிலுக்கும்
பல கவிதை சொல்வேன்!

எங்கெங்கும்
ஆட்டம் போட்டுத்
திரியும் காற்றை
அடங்கச் சொல்வேன்!
வானத்தின்
ஆதவனைப்
பெரும் மாதவனைக் 
கை அடக்கிக் கொள்வேன்!

கடவுள் வாழும்
கற்பனை உலகில்
கவிதைத் தேரில் பயனிப்பேன்!
கடந்து செல்லும்
பாதையில் எல்லாம்
கருணைக் கல்வி வியாபிப்பேன்!

நடந்து கொண்டே
பறந்து செல்லும்
நல்ல கலைகளைக் காட்டிடுவேன்!
நான் காண்கின்ற
கடவுளை என்றன்
நர்த்தனச் சொல்லில் கூட்டிடுவேன்!

ஆம்...
நான் அமர கவிஞன்
வெறும் தெருவில் சுவைஞன்!!

-விவேக்பாரதி
27.12.2017

Comments

Popular Posts