கடையக் கல்யாணி

பொன்னுரு வச்சிலைத் தேவீ - பதம்
   மேவி - மனம் தூவித் - தொழும்
   போகம்  விரும்பிடும் ஆவி! - எழும்
பொல்லாத்துய ரில்லாக்கதி
நல்லார்க்குறும் வல்லாற்றல்கள்
   போகம், - தவத் தேகம்

சென்றதை விட்டிடும் சிந்தை - புது
   விந்தை - சுடர்ச் சந்தை - எனச்
   சேரும் வியப்புகள் வேண்டும்! - தரும்
செல்வாக்கினி லெல்லார்க்கருள்
வல்லாக்கினி சொல்வாக்கினி
   ராணி - கலி யாணி!
     
நின்றன் பதமலர் கண்டு - களி
   கொண்டு - கவி விண்டு - வரும்
   நினைப்பும் உண்மையில் வண்டு! - அது
நிலையாயுனை மலரேயென
நினைவேகொளும் உயர்வாய்த்துளும்
   பண்டு! - பதி லுண்டு!

அன்புப் பராசக்தி தாயே - ஒளி
   நீயே! - சுடர் வாயே! - எனும்
   அர்த்தம் உணர்த்திவிட் டாயே! - புது
அறிவாலுனை நினைவோமினி
அழிவேயிலை உயர்வோமெம
   தாயே! துணை நீயே!!

-விவேக்பாரதி
20.17.2017

Comments

Popular Posts