லக்‌ஷ்மி துதி

ஒரு சந்திர கிரகணத்தன்று இரவு,என்னை உலுக்கி வெளிவந்த லக்‌ஷ்மி துதி!
 

(காளி ஆட்சி, ஆண்டவை என்ற என் முன்னிரு கவிதைகளின் தொடர்ச்சி)

அடர்ந்தொரு கான கத்தில்
    அகப்படும் நேரம், அச்சம்
பொடிந்திடக் காளி என்னும்
    பொலிவுடைக் கரங்கள் தூக்கி
வடிவுற அரசைத் தந்து
    வண்ணமின் நகருக் குள்ளே
குடிபுக வைத்தாள் அம்மா!
    குணவதி மறைந்தாள் அம்மா! (1)

அம்மவோ அங்கே நானும்
    அமைவுற நின்றன் கீர்த்திச்
செம்மையை அன்றி வேறு
    சேர்க்கையைக் கருத்திற் கொள்ளேன்!
விம்மலும், துயரும், கோப
    வீச்சதும் ஏழைக் கன்றாம்!
தும்மலும் பெரிதாம், செல்வம்
    தோன்றிடப் பெற்றார்க் கங்கே! (2)

கேண்மையும், அறிவும், ஞானக்
    கேள்வியும், சமவு ணர்வும்,
ஆண்மையும், தெய்வ பக்தி
    ஆழமும், இருந்த போதும்
ஊண்தரும் நின்றன் ஆற்றல்
    உடனிலா ஏழை யோரை
நாணிலார் என்றே வையம்
    நசுக்குதல் கண்டேன்! அந்தோ! (3)

தோளிலே வலிமை தாங்கி
    தோன்றிடும் எனக்கும், உண்ண
வேளையில் சோறு, போர்த்த
    வெறுந்துணி, இருக்க வீடு
நாளெலாம் தேவை யாக
    நானிதை எழுது கின்றேன்!
வேளவன் மாலின் மார்பில்
    வியப்புற நின்ற தேவி! (4)

தேவியே! கருணை ஊற்றாம்
    தேசுடைத் திருவே! நின்றாள்
மேவியே பணிவேன், துன்பம்
    மேலிடக் குணியேன்! என்றன்
ஆவியை வாழ வைத்தே
    அருமுடல் செழிப்பைச் சேர்க்கும்
காவியப் பாவாய் லக்‌ஷ்மி
    கடைவிழி அருளைத் தாராய்! (5)

ஆய்ந்தென தறிவை நன்றாய்
    அளைந்தபின் னேகி டைத்த
வாய்மையின் வழியாம் நின்னை
    வணங்கிவாழ் கின்ற மார்க்கம்!
தாய்நினக் கடியன் வாழ்க்கைத்
    தன்மைகள் தெரியப் பெற்றால்
பாய்ந்திடும் மகிழ்ச்சி வெள்ளம்
    பாலனை நனைத்தி டாதோ? (6)

ஓருவாய் நானும் உன்னை
    ஒருபிடி மண்ணா கேட்டேன்?
பேரெழில் பொன்னா கேட்டேன்?
    பெருமையாம் மனையா கேட்டேன்?
சீருடன் என்றன் பக்கம்
    ஸ்ரீநிதி நீயி ருக்கக்
கோரிடும் அன்பன் என்னைக்
    கொஞ்சம்நீ நோக்கல் வேண்டும்! (7)

வேண்டுவோர்க் கில்லா மையை
    வெருட்டிடும் அன்பு தேவி!
மாண்புடைப் பேறென் றேதான்
    மண்ணெலாம் போற்று கின்ற
காண்புது வொளியே! ஆழக்
    கவியுளம் துதிக்கும் அன்னாய்!
ஆண்டவர்க் குதவும் கோலே!
    அடியனின் வாழ்வில் நிற்பாய்! (8)

நின்றொரு பார்வை யாலே
    நிலைபெறச் செய்வாய்! வாழ்வைக்
குன்றென நிமிர்த்திக் காட்டிக்
    குவலயம் போற்றச் செய்வாய்!
நின்னரும் பெயரைச் சொல்லி
    நிதமொரு பனுவல் பன்னி
என்னிருள் களையக் கேட்பேன்
    எழுந்திடல் திண்ணம் செய்வாய்! (9)

வாய்மொழிப் புலவர் சொன்ன
    வாக்கெலாம் வாழ்ந்த தேவி!
தாய்மையின் வடிவே! எம்மைத்
    தளர்விலா திருக்கச் செய்வாய்!
ஓய்கவென் வறுமை! செல்வம்
    ஓங்குக! இல்லா மைதான்
சாய்க!நின் நட்பின் ஜோதி
    திகழ்கவென் னோட டர்ந்தே!! (10)

-விவேக்பாரதி

17.08.2017

Comments

Popular Posts