கல்யாணிக் கடிதம்

கடயம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். அந்தக் கல்யாணி அம்மனுக்கு ஒரு கடிதம் எழுதாமலா??

அன்புடை அம்மா வுக்கு,
   அடியனின் நலத்தைச் சேர்த்துப்
பன்னலம் காக்கும் தாயே
   பார்வதீ! நலமா? என்றன்
மின்னலாம் பயணப் பாதை
   மீதிலே உள்ளேன்! கொஞ்சம்
என்னுடைக் கடிதத் தைநீ 
   எடுத்துடன் பார்த்தல் வேண்டும்!

உன்றனைக் காணு தற்கே
   ஊர்களைத் தாண்டி இந்தக்
கன்றுதான் வருகின் றேனென்
   கவலைகள் தீர்க்கும் தேவி!
நன்றெனை நெருக்கி நிற்க
   நலிவெலாம் விலகி யோடத்
தென்றலை அருளைக் கொஞ்சம்
   திரட்டிவை வருவேன் அங்கே!

மனமெலாம் உன்னைக் காணும்
   மணமுடைக் கனவுக் கோலம்!
தினமெலாம் ஓடும் ஓட்டம்
   தீருமோ எனுமோர் ஆசை!
எனக்கெனைக் காட்டும் ஆடி
   எழிலுனைக் கண்டு கண்டு
வனப்பிலே உருகிப் பாடும்
   வளமுடைக் கவிதை ஊற்று!

இத்தனை கொடுத்து விட்டாய்
   இளையனைப் புவிக்கு விட்டாய்
சொத்தென நின் நினைவைச்
   சுமந்திடச் சொல்லி விட்டாய்
வித்தகம் உண்மை தேக
   வீரியம் நல்ல புத்தி
அத்தனை யுங்கேட் கத்தான்
   அங்குவரு கின்றேன் தாயே!

பிள்ளையை மடிய மர்த்திப்,
   பீடுடைப் நின்பால் ஊட்டி,
உள்ளமும் உடலும் கொண்ட
   ஊறெலாம் அதனால் போக்கி,
தெள்ளிய ஞானக் கோவில்
   தெரிந்திடும் வகையைக் காட்டி,
வெள்ளமாம் ஆனந் தத்துள்
   வைத்துநீ வாழ்க வாழ்க!!

-விவேக்பாரதி
20.12.2017

Comments

Popular Posts