சித்தி விநாயகப் பத்து

சித்தி விநாயகனே! சிந்தையெலாம் நிற்பவனே!
புத்தியது வேண்டும் புரிந்தருள்வாய் - அத்தனே!
தும்பிக்கை மீது துவளாமல் இவ்வடியன்
நம்பிக்கை கொண்டேன் நடத்து! (1)

நடத்தும் கலிகாலம் நன்மை அளிக்க
மடமை ஒழிந்து மகிழ்ச்சி - மிடுக்கக்
கடைக்கண் அருள்தந்து கால்களைச் சேரும்
மடையிலா இன்பம் வழங்கு! (2)

வழக்கும் நினதுபெயர் வாக்கினிலே சொல்லும்
பழக்கம் உடையவன் அல்லேன் - எழிற்களிறே!
என்காட்டு மூங்கில் எனைவாட்டும் முன்னமே
தின்றிட்டால் தாழ்வேன் சிரம்! (3)

சிரமாற்றம் கொண்ட சிறப்பான தேவா!
வரமாற்றும் நல்ல வரமே! - நரைமாற்றி
என்தலை சாயுமுன் உன்னருள் ஜோதியின்
மின்னலைக் காட்டி மிளிர்த்து! (4)

மிளிரும் இருகாது மின்னும் உடலோ
டொளிரும்நீள் நாசி உடைய - களிறே!
உனதருளைக் கேட்டே உலவுகிறேன் நீவந்
தெனதுவினை தீர்த்தால் எழில்! (5)

எழிலான அங்குசமும் ஏற்றமிகு கையில்
அழியாத சங்கமுமே ஏந்தித் - தொழிலாகக்
காத்தலைக் கொண்டிருக்கும் காருண்ய மூர்த்தியே
பாத்தலைவ! தீர்ப்பாய் பவம்! (6)

வம்புக்கும் போகாமல் வாயாடல் செய்யாமல்
அம்புக்கும் வாளுக்கும் அஞ்சாமல் - சம்பு
குமாரநின் தாளைக் குறித்துத் தொழுவேன்
அமோக நிலைதந்தே ஆள்! (7)

ஆள்கின்ற மாயங்கள் ஆட்டிடும் தீமைகள்
நீள்கின்ற சூழ்ச்சிகள் நீங்கவே - வேள்நின்றன்
சேவடி பற்றிடச் சேர்ந்தேன் எனையணைத்து
நீவடி வாக்கு நிலத்து! (8)

நிலத்துள் யமபயம் நீங்கக் கொடுத்து
மலங்கள் அகற்றி மலர்த்திக் - குலவும்
பிழைநீக்கிச் சொல்லின் பிதற்றலைப் போக்கி
மழைபோலத் தாராய் மறை! (9)

மறையோனே! இன்ப மலையோனே! காக்கும்
பொறையோனே! தெய்வப் பொறியே! - நிறையோனே!
பாக்கரம் கொண்டு பணிகின்றேன் எனைக்காத்துச்
சீக்கிரம் கற்பிப்பாய் சித்து! (10)

-விவேக்பாரதி 

28.08.2017

Comments

Popular Posts