தீபாவளிக் கனவு

மாசோடும் தூசோடும் நெரிச லோடும்
    மண்மீது குப்பையெனும் உருவத் தோடும்
தேசாடும் ஒளிமுகத்தை மறைக்கும் வண்ணம்
    தெளிவற்ற புகைசூழ! வேட்டுச் சத்தம்
கூசத்தான் காதுகளைக் கிழித்துத் தள்ளக்
     குற்றமிலா எழில்தன்னை மறந்த பெண்ணாய்
நேசத்தைத் துறந்தவளாய் அந்தப் பெண்ணாள்
    நேற்றென்றன் வாசலிலே வந்து நின்றாள்!

மற்றவர்கள் அவளுருவை, வரவைத், தங்கள்
    மகிழ்ச்சியென் றேயெண்ணி மகிழ்ந்தி ருக்கப்
பெற்றவொரு வெறுப்பாலும் எரிச்ச லாலும்
    பேதையவள் வருகையைநான் மதித்தி டாதங்
குற்றவளாம் "தீவாளி" தம்மை நோக்கி
    உயர்வான கேள்வியெனும் வாளி விட்டேன்!
கற்றவளோ அறிவிலியோ யோசிக் காமல்
    கடமையென என்கேள்வி நானும் கேட்டேன்!

தீபத்தின் ஆவளியாம் உன்னை மக்கள்
    தீவாளி என்கின்றார் அச்சொல் லுக்கு
நீபொருளைத் தெளிவாயா என்றேன் அன்னாள்
    நிச்சயமாய்த் தெரியாதே என்று சொன்னாள்! 

"ஆபத்தே ! அம்மாநீ அறிதல் வேண்டும்!
    அக்கினியின் அம்பன்றோ தீயின் வாளி
கோபத்தில் உமிழ்வார்த்தை தீயின் வாளி
     கோலவொளிப் பெண்ணுனக்கு மிப்பேர் நன்றோ?"

என்றவுடன் யோசித்தாள் மேலும் சொன்னேன்
    "என்னழகுத் தீபவொளித் திருநாள் உன்னைப்
பொன்பரவி நிற்பதுபோல் பொங்கும் ஜோதி
    பொலியுருவில் காண்பதன்றோ மகிழ்ச்சி! நன்மை!
இன்றையநாள் உன்பேரில் நிலத்தார் எல்லாம்
    இயற்கையெனும் தாய்ரணத்தின் மேலே தீயைக்
கொன்றழிக்க வைக்கின்றார் நீதம் தானோ?
    கொஞ்சம்நீ உணரெ"ன்றேன்! அவள் சிந்தித்தாள்!

"நரகாசு ரன்தன்னைக் கொன்ற கண்ணன்
    நல்லவித அருளாக அசுரன் செத்த
இரவுமுதல் ஆண்டாண்டாய் இந்நே ரத்தை
    இனியதொரு தீபத்தின் வரிசை கட்டி
இருள்விலகி ஒளிகூட வந்த தென்றே
    இன்பமொடு கொண்டாட வேண்டும் என்றான்!
பரவிவந்த அவ்விஷயம் மருவி இங்கே
    பாழ்படுத்தும் வெடிநாளாய் ஆன தையோ?

அப்போது நம்நாட்டில் இன்று போல
    அழிகின்ற இயற்கையிலை! இற்றை நாளில்
செப்பத்தான் முடியாத அளவுக் கன்னாள்
   செழிப்பிழந்தி ருக்கின்றாள்! தினமும் மக்கள்
ஒப்பற்ற தேவைக்காய் அவள்மேல் மாசை
    உமிழ்ந்தபடி நகர்கின்றோம்! அதுவே குற்றம்!
இப்பழியில் மேலுமொரு பழிசேர்ந் வாற்போல்
    இந்நாளில் வெடிவெடித்தல் ஞானமோ சொல்?"

இவ்வுரைகள் கேட்டவுடன் வந்த தீபா
    இயம்புகிறாள்! "நன்றிதனைப் புரிய வைத்தாய்!
கவ்வுமிருள் நீங்கவழி காட்டி விட்டாய்
    காரியமாய் மக்களிடம் நானே சொல்வேன்!
தவ்வுவெடி யில்லாமல் புகையில் லாமல்
    சத்தங்கள் இல்லாமல் இசை நிரம்பச்
செவ்வொளியாய்த் தீபங்கள் மட்டும் ஏற்றிச்
    சேர்த்திடுவோம் நல்லின்பம் என்று சொல்வேன்!

"ஒருநாளில் வெடிக்காமல் இருந்தால் மட்டும்
    ஒழிகின்ற இயற்கைநலம் தேறிப் போமோ?
கருதுங்கள்!" என்றுசிலர் மறுத்துச் சொல்வார்!
    கடமையென அவருக்கும் எடுத்துச் சொல்வேன்!
ஒருநாளில் குறையாதே என்ற போதும்
    ஒருநாளில் நிச்சயமாய் நிறைந்து போகும்!
ஒருநாள்தான் கழியட்டும் என்றால் அந்த
    ஒருநாள்நம் ஆயுளையும் குறைக்கு மன்றோ!

என்றவர்க்கு நானெடுத்துச் சொல்வேன் தோழா
    என்கண்ணைத் திறந்துவிட்டாய் நன்றி" என்றே
பொன்மருவித் திகழ்தீபா வளியும் சொன்னாள்!
   "புகழ்கொள்வொம் ஆஹா!நாம்" என்றே துள்ளி
நின்றுவிட்டேன்! சட்டென்று நெஞ்சம் விம்ம
    நிகழ்ந்ததொரு வெடிசத்தம்! அப்பா வந்தே
என்காதைத் திருகியெண்ணெய் தேய்த்து விட்டார்
    எல்லாமே கனவாகக் கழிந்த தன்றே!!

-விவேக்பாரதி
20.10.2017

Comments

Popular Posts