சுதந்திரச் சேவல்

71 ஆம் ஆண்டில் கால் வைக்கிறோம்...சுதந்திரக் காலை இப்படி விடிகிறது.....

சுதந்திரச் சேவல் கூவுதடி - அது
   சூரியன் வந்ததைப் பாடுதடி!
கதவு உடைந்தனவாம் கூவுதடி - நாம்
  கனவடைந் தனமாம் பாடுதடி!

பாரதர் ஒற்றுமை பார்த்தவர்கள் - நிலை
   பயந்துவிட் டாரெனக் கூவுதடி
தாரக வந்தே மாதரந்தான் - நம்
   தரணியும் சொல்வதைப் பாடுதடி!

அறிவில் சுதந்திரம் நாமடைந்தோம் - என
   ஆர்ப்பரித்தே தான் கூவுதடி!
நிறைந்திடும் ஞானமே செல்வமென்று - சொலும்
   நிலைமை கண்டோமெனப் பாடுதடி!

அச்சம் அழிந்திட ஆனந்தமே - நம்
   அகத்தில் நின்றிடக் கூவுதடி
உச்சம் அடைந்தனம் பாரதர்தான் - எனும்
   உணர்ச்சியில் வானையும் மோதுதடி!

வெள்ளை விடியலைப் பார்த்துவிட்டோம் - நம்
   வேதனைக் கட்டினைப் பேர்த்துவிட்டோம்!
பள்ளத் திருட்டினை நீங்கிவிட்டோம் - இனி
   பார்ப்பம் விடுதலையென் றோதுதடி!!


-விவேக்பாரதி
15.08.2017

Comments

Popular Posts