வாணியம்மா

காலை எழுந்ததும் வீட்டில் சியாமள தண்டகம் ஒலித்துக் கொண்டிருந்தது, இவள் தன்னை எனக்கு மட்டும் இப்படி வெளிப்படுத்திக் கொண்டாள்

உன்றனை வாழ்த்துகிறேன் - மிக
    உயர்ந்தவளே கலைத் திருமகளே!
என்றனை வாழவைப்பாய் - என்னில்
    ஏறி உலகத்தை நீரசிப்பாய்!
மன்றென நெஞ்சமைத்தேன் - நின்
    மலர்ப்பதம் தாங்கிடக் கண்படைத்தேன்
நின்றெனைக் காத்திடம்மா - அடி
    நித்ய சுமங்கலி வாணியம்மா!

ஊருக்குச் சேதிசொல்ல - நின
    துண்மை இயலை எடுத்துச்சொல்ல
பாருக்கு நீதிசொல்ல - என்
    பாட்டுக்குள் ஏறுக பாரதியே!
காருக்குக் காற்றுதவும் - மலர்
    காட்சிக்குச் சூரியன் தானுதவும்
யாரெனக்கும் உதவ? - எழில்
    யாழைப் படைத்தநல் வாணியம்மா!

சொல்லின் வனத்திடையே - எனைச்
    சோதனை செய்திட விட்டவளே!
அல்லின் கனவிலெல்லாம் - பல
    ஆனந்தப் பாட்டொடு தொட்டவளே!
கல்லின் உருவத்திலும் - பலக்
    கவிதைகள் காட்டிக் கொடுத்தவளே!
இல்லை குறையெனக்கே - நின்
    இணைமலர் பாதமென் இதயத்துளே!

வேத விளக்கங்களும், - பல
    விற்பனர் செய்கவிப் புழக்கங்களும்,
நாத முழக்கங்களும், - உயர்
    நல்லிசை பாடும் பழக்கங்களும்,
ஏதும் புரிந்தறியேன் - தமிழ்
    எழுத்துக்கு வாழ்க்கைபட் டாடுகிறேன்!
சீதக் குளிர்மதியே - என்
    சிந்தையில் ஏறிச் சிலிர்ப்பவளே!
 

நின்னைக் கதியெனவே - புகழ்
    நித்தம் புகழ்ந்து மனத்தினுள்ளே
என்னைத் தொலைத்திடுவேன்! - அதில்
    ஏறி வருமுன் எழிலுணர்வேன்!
மின்னை அணித்தமதி - ஒரு
    மீட்டலில் தந்து மறைபவளே!
இன்னல் கெடுப்பவளே - அறி
    விருட்டை விலக்கிய அற்புதமே!!

-விவேக்பாரதி
30.11.2017

Comments

Popular Posts