தமிழமிழ்து

தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
அமிழ்த மாகி வந்து நின்ற
    ஆசியே தமிழ் தமிழ்!

முகிழ்ந்தெ ழுந்து வீசு கின்ற
    முறுவலே தமிழ் தமிழ் !
அகழ்ந்து கொண்டு நெஞ்சில் ஓடும்
    ஆற்றலே தமிழ் தமிழ்!

ஈசன் தந்த டமரு கத்தின்
    இசையடா தமிழ் தமிழ் !
தேசம் யாவும் நேசம் வைத்த
    தேனடா தமிழ் தமிழ்!

நாவெ டுத்த மனிதன் சொன்ன
   நல்லசொல் தமிழ் தமிழ்!
பாவெ டுத்த கவிஞர் சொல்லும்
   பாட்டெலாம் தமிழ் தமிழ்!

வான ளந்து மண்ண ளந்த
    வாசமே தமிழ் தமிழ்!
ஞான முக்தி அறிவு னுக்தி
    நல்குமே தமிழ் தமிழ்!

இனிமை கொண்ட மொழியி தெங்கள்
    இறையடா தமிழ் தமிழ்!
மனிதர் வாழ மார்க்கம் சொல்லும்
   மறையடா தமிழ் தமிழ்!

காற்றி லெங்கும் புகழ் மணக்கக்
   காணுமே தமிழ் தமிழ்!
போற்றி உலக மோதும் பாஷை!
    பொன்னடா தமிழ் தமிழ்!

தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
    தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
அமிழ்த மாகி வந்த தெங்கள்
    ஆவியே தமிழ் தமிழ்!!

-விவேக்பாரதி
11.10.2017

Comments

Popular Posts