இசையே

இசையே அமிழ்தம் ! இசையே சொர்க்கம் !
    இசையே இன்பத்தின் சாரம்!
இசையே போதம் ! இசையே போதை !
    இசையே எண்ணத்தின் வீச்சு!
இசையே அழகு ! இசையே தெய்வம் !
    இசையே மனங்களின் பாவம்*!
இசையல் லாதோர் இனிமை கேட்கின்
    இயலா தென்போமே நாளும்!

புள்ளிடும் இசையில் புளகம் பிறக்கும்!
    புயலிசை புயவலி கூட்டும்!
துள்ள வைக்கின்ற நாட்டிசை நம்மைத்
   துன்பத்தை விட்டுயர்வு காட்டும்!
உள்ளம் இழுக்கும் இசையே வேதம்
   உலகில் சமசரச மார்க்கம்!
அள்ளக் குறையா மதுவின் கோப்பை
    அழியா உயர்நிலை ஞானம்!

காதலும் இசையே! கலவியும் இசையே!
    கருவுறல் மகப்பே(று) இசையே!
மோதலும் இசையே மோட்சத்தை வேண்டும்
    மோனமும் பிறிதொரு இசையே!
யாதுமெம் அன்னை கலைமகள் செய்யும்
    யவ்வணக் கோலங்கள் என்றே
ஓதுவம் ஓதுவம் இசைவெள் ளத்தில்
    ஓடுவம் கூடுவம் வாரீர்!! பாவம் - பாவனை

-விவேக்பாரதி
25.09.2017

Comments

Popular Posts