இன்பமாலை

இன்ப மாலைக் கிரணத்திலே
    இதயக் கூட்டில் நிலவுதிக்கும்!
துன்ப வாடை நீங்குகையில்
    துய்ய ஜோதி நமையழைக்கும்!

காற்றில் நல்ல இசைபரவும்
    கருப்பு மெல்லக் கவ்வவரும்
நேற்றைக் கொஞ்சம் நினைத்திடவே
    நெஞ்சம் எங்கும் அலையடிக்கும்!

வானம் கோலம் வரைவதுவும்
    வாழ்வின் நீளம் கரைவதுவும்
மோன மாக உணருகையில்
    மொத்த மாக விளங்கிவிடும்!

உழைக்கும் கூட்டம் ஓய்வதுவும்,
    அடுத்த கூட்டம் ஓடுவதும்,
பிழைக்கும் இந்த மாலைநிலா
    பிறைக ளாகித் தேய்வதுவும்,

வீதி கொள்ளும் வாசனையும்,
    விண்ணின் தூர யோசனையும்,
சேதி சொல்ல மாலைவரும்
    சேர்த்துப் பார்க்கக் கவிதைவரும்!!

-விவேக்பாரதி
05.12.2017

Comments

Popular Posts