மரணத் தழுவல்

அறியாத யாரோ
சிரிக்கின்ற ஓசையும்
அதைக்கேட்டு நெஞ்சம்
இனிக்கின்ற வாடையும்
பொறியோடு சீற்றம்
புதைக்கின்ற வேளையும்
போதம் ஞானம்
உணர்கின்ற காலையும்
ஆஹா!!
நெருங்குகின்றதே
அந்தக் காலடி
என் காளியின்
நித்தில விரல்கள்,
முத்துச் சதங்கை
ஒலிக்கின்ற நாதம் கேட்கிறதே...
ஒரு ஓரத்தில் அங்கே நிழலில் காளியோ
கண்ணனோ
காலத்து இறைவனோ
கைநீட்டி அழைக்கும் பிம்பம் விரிகிறதே...
நாடி நாளங்கள்
கூடிப் பேசி
விடைபெறும் தருணத்தை
விவரிக்கிறதே...
அந்தோ
விடுதலை பெறும்
தருணம் எனும் போது
சுற்றம் மட்டும்
அழுது தொலைக்கிறதே...
தழுவட்டும் இந்த மரணம்!
மனம் தன்னை நீங்கும் தருணம்...!!

-விவேக்பாரதி
15.12.2017

Comments

Popular Posts