புதுவெம்பாவை - ஆன பொழுதின்


4) ஆன பொழுதின்...

ஆன பொழுதின் அதிசயத்தைக் காணாமல்
மோனத் துயிலினுள் மூழ்கி யிருப்பவளே!
ஞானத் துருவன் நமதிறைவன் விக்னேசன்
சேனைத் தலைவன் செறுக்கறுப்பா னென்றெல்லாம்
தேனவிழ் அல்லி திசைநாறும் தாமரை
மானப் பெரிய மதுரப்பூ நின்றபடி
ஊனலையும் ஆற்றி லுவந்துநீ ராடிநாம்
வானவ ராகி வளமுறுவோ மெம்பாவாய்!!

கருத்து:

பொழுதாகி விட்டது. அப்படியென்றால் காலை விடிந்து விட்டது என்று பொருள். காலை விடியும்போது வானத்தில் ஒளி பரவும். அந்தப் பரவலில் எத்தனை அதிசயங்கள் நிகழும் தெரியுமா? அதையெல்லாம் காணாமல் நீ மட்டும் அமைதியாக தூங்கிக் கொண்டிருப்பாயோ? இப்படித் தூக்கத்தில் மூழ்கிக் கிடப்பதுதான் சரியா?  பெண்ணே! 

ஞானமே உருவானனம் விநாயகன். அவனே நமக்கெல்லாம் இறைவன். அவனுக்குத் துன்பங்களைத் துடைப்பவன் என்ற பெயரும் உண்டு. சிவபெருமானின் பூத சேனைக்கு அவனே தலைவன். நமக்கு உருவாகும் செருக்கினை அழிக்கும் வல்லவன். அவன் புகழைப் பாராட்டி, 

அல்லி மலர்களில் இருந்து தேன் வழிந்து, திசையெல்லாம் மணக்கக் கூடிய ஆற்றில், தாமரைகள் பெரிதாக வளர்ந்திருக்கும் தேக்கத்துக்கு அருகில், அந்த இனிமையுடைய பூக்கள் தங்கள் உடல்களை நனைத்து நீராடும் ஆற்றில் குளிப்போம். அவ்வாறு நாம் செய்தாலேயே வானத்தில் வாழும் தேவர்களுக்கு நாம் சமமானவர்கள் ஆகிவிடுவோம். அதுவே நமக்கு வளம். அவ்வளத்தைப் பெறுவோம் என் பாவையே!!

-விவேக்பாரதி
19.12.2017

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி