மலர் வாழ்வு

இணையத்தில் மணி அண்ணனின் ஒரு கவிதை என்னை இப்படிக் கிளர்த்தியது....

ஒற்றைக்கால் தவம்செய்து மோட்சம் வாங்கி
   உவகையுடன் இருக்கின்ற பூக்கள் போலக்
கற்றவரும் வாழ்தற்கிங் கிடமுண் டாமோ?
   கவிஞர்க்கும் புலவர்க்கும் வழியுண் டாமோ?
உற்றவரை எண்ணாமல் மனமெண் ணாமல்
   உறவின்றி பிரிவின்றி இருக்கும் பூக்கள்!
மற்றவரை மனந்தன்னை எண்ணி எண்ணி
   மலர்கொள்ளும் நாம்மட்டும் மயங்கு கின்றோம்!

ஒருநாளில் ஆயுள்தான் என்ற போதும்
   ஒருபோதும் மலர்கவலை கொள்வ தில்லை!
இருக்கின்ற தொருநாளே என்று வீணாய்
   இடருக்குள் வீழ்கின்ற எண்ணம் இல்லை
வருத்தங்கள் இல்லாமல் வனப்பை மட்டும்
   வாரிக்கொ டுக்கின்ற தன்மை கொண்டு
இருந்தாலும் மலரைப்போல் இருக்க வேண்டும்!
   இன்பத்தை மட்டும்நான் ரசிக்க வேண்டும்!

மலருக்கு வண்டுவந்தால் இன்பம் இல்லை
   வாராது போனாலோ துன்பம் இல்லை
மலருக்கு மாலையாக ஆசை இல்லை
   மாலையென ஆனாலும் கவலை இல்லை
மலருக்குக் கூந்தல்தொட விருப்பம் இல்லை
   மணம்வீச அதுநேர்ந்தால் கலக்கம் இல்லை
உலகத்தில் மலர்போல வாழ வேண்டும்
   ஒன்றிற்கும் எதிர்பார்க்காத் தன்மை வேண்டும்!!

-விவேக்பாரதி
30.12.2017

Comments

Popular Posts