நாசுக்கான அறிவுரை

நாசூக்கான அறிவுரை சொல்வேன்
       நண்பா இதுகேளாய்! - ஒரு
   நங்கையின் மேலே காதலும் உற்றால்
       நடிக்கப் பழகிக்கொள்!
பேசாக் கதைகள் பேசப் பழகு
       பேரழகில் மூழ்கு - முனம்
   பேணாதவற்றைப் பேணப் பழகு
       பெருமமைதி தாங்கு!

காதல் வந்தால் வந்த கணத்தில்
       கண்ணால் சொல்லிவிடு - சிறு
   கடிதம் கவிதை பாட்டா லேனுமுன்
       கருத்தைச் சொல்லிவிடு!
மோதல் வந்தால் முதலில் தீர்க்க
       மூர்க்கம் நீக்கிவிடு! - பிழை
   முன்னோ பின்னோ பார்த்துக் கொள்வோம்
       முதலில் அணைத்துவிடு!

அவள்மேல் கொண்ட மோகம் எல்லாம்
       அழகாய்ச் சொல்லிலுரை - அவள்
   அழகை எல்லாம் பட்டியல் போடு
       அழிவின் புள்ளிவரை!
குவியும் இதழ்கள் சிலபோழ் துடனே
       கொண்டு குடித்துவிடு! - அக்
   குவியலில் நாட்டம் அவளுக் கிலையேல்
       கொள்கை கிழித்துவிடு!

துரத்தித் துரத்திக் காதல் செய்யும்
       துக்கம் அகற்றிவிடு! - மனத்
   தூய்மை கண்டால் தானாய்ச் சேரும்
       துன்பம் முறித்துவிடு!
விரகம், மோகம், எல்லாம் நேரம்
       விரையும் வரையினில்தான்! - அவ்
   விடையைக் காலம் உனக்குக் கொடுக்கும்!
       வீரியம் காத்துவிடு!

ஒப்புக் கொள்ளாப் பெண்ணும் பெண்தான்
       உடனே பாயாதே! - உன்
   ஒற்றைச் சொல்லுக் கிசைவுற் றெங்கும்
       ஒளிகதிர் தேயாதே!
தப்பும் சரியும் பருவக் கூத்து
       தகுந்த நாளமையும்! - நான்
   தமிழிற் சொன்ன அறிவுரை ஆய்வாய்!
       தரமாய் வாழ்வமையும்!

-விவேக்பாரதி
05.11.2017

Comments

Popular Posts