இப்படி எப்படி?


அன்புள்ள காதலிக்கு, 

நடந்து கொண்டே பறக்கின்றேன்! - என்
   நாளைக் கனவில் கழிக்கின்றேன்!
உடைந்து கொண்டே இருக்கின்றேன் - உன்
   உருவம் கண்டால் வளர்கின்றேன்!
குடையும் நெஞ்சில் கூச்சல்கள் - மனக்
   குட்டிக் கரணம்! சட்டென்றென்
எடையில் குறைவு! மாற்றங்கள்! - அட
   எப்படி இப்படி? ஏக்கங்கள்!

ஒருகண் தானே காட்டுகிறாய் - அதில்
   உலகை எப்படி மறக்கின்றேன்?
ஒருசொல் தானே பேசுகிறாய் - அதில்
   ஊர்ந்தே எப்படி ஜனிக்கின்றேன்?
ஒருஜா டைதான் செய்கின்றாய் - அதில்
   உன்னை எப்படி அறிகின்றேன்?
ஒருமுத் தந்தான் தருகின்றாய் - அதில்
   உம்பரை எப்படி வெல்கின்றேன்?

காலை வெய்யில் தீய்ப்பதுவும், - உன்
   காட்சி பகலைச் சாய்ப்பதுவும்!
மாலை இரவு நீளுவதும், - என்
   மனத்தில் பிம்பம் சூழுவதும்,
ஆலைச் சத்தம் எல்லாமும் - என்
   அடிவ யிற்றுள் கேட்பதுவும்,
ஓலை போலென் நெஞ்சத்தில் - உன்
   ஓவம் தெரிவதும், எப்படியோ?

நிட்டை மனத்தில் மலர்வாசம்! - உன்
   நிழல்கண் டாலும் உற்சாகம்!
சட்டென் றென்னுள் இடிமின்னல்! - அதைச்
   சாதக மாக்கும் உன்பின்னல்!
கொட்டிச் சிரிக்க பூபாளம்! - உன்
   கோபப் பார்வை பூகம்பம்!
குட்டிக் கிளிபோல் உன்சேட்டை! - மிகக்
   குழப்பு தென்னை எப்படியோ?

என்செய் திடநீ வந்தனையோ? - இனும்
   எவ்வா றெல்லாம் செய்வாயோ?
உன்செய் கைக்கோர் அளவுண்டோ? - அடி
   உள்ளக் கிடங்கில் வசிப்பவளே!
மின்னல் கோடி இசைப்பவளே! - என்
   மீசை திருகி ரசிப்பவளே!
இன்னும் எதைநீ செய்வாயோ? - நான்
   இப்படி எப்படி உய்வேனோ?

*

அன்றொரு நாளென் அகத்துள் வந்து
நின்றொரு பாரம் நிறுவிப் பறந்தனை....

அப்பொழு தேவுன் அடிநிழல் ஆனேன்
இப்படி யேயினி எப்படி வாழ்வது?

முத்தக் கனிகள் முகிழக் கொடுத்துச்
சித்தந் தனைநீ சிறைபி டித்தனை....

அப்பொழு தேவுன் அடிமையும் ஆனேன்
இப்படி யேயினி எப்படி வாழ்வது?

காதல் எனுமோர் காவியக் காட்சியில்
நீதலை வன்என நிகழ்த்தி உயர்த்தினை...

அப்பொழு தேவுன் அரசனு மானேன்
இப்படி யேயினி எப்படி வாழ்வது?

தலைமுடி கோதி தழுவிப் பிரிந்து
நிலைதடு மாற்றம் நிறைய செய்தனை....

அப்பொழு தேவுன் அகம்தொட முந்தினேன்
இப்படி யேயினி எப்படி வாழ்வது?

கவிதை கிறுக்கிக் கதைத்திடும் நேரம்
செவிக்குழை ஆடிடச் சேர்ந்து ரசித்தனை...

அப்பொழு தேவுன தாசிரிய னானேன்
இப்படி யேயினி எப்படி வாழ்வது?

இரவும் பகலும் இதயமும் இதழும்
உரசிக் கொளவே உறவு நடத்தினோம்...

அப்பொழு தேநாம் அகிலமு மானோம்
இப்படி யேயினி இன்புற வாழ்வோம்!!

#மௌனமடிநீயெனக்கு

-விவேக்பாரதி 
07.01.2018
 

Comments

Popular Posts