ஏதாவது தான்

திறந்ததும் "ஏதாவது எழுதலாமே" என்று பேஸ்புக் தரும் புத்துணர்வு வேகம் கொடுக்கிறது..

ஏதாவது தான் எழுதுகிறேன்! - அது
   ஏனென்றே தான் புரிவதில்லை!
யாதோ ஊக்கி தெரியவில்லை! - அது
   யாரோ எவரோ பதிலுமில்லை!

நீலப் பொய்கை, நெடுவானம், - அதன்
   நித்திலப் பந்தல், நிலவுத்தாய்,
கோலம், ஓவம், குளிர்,மின்னல், - சில
   கொத்துச் சொற்கள் எல்லாமும்
ஜாலம் செய்து சாதிக்க! - பல
   சண்டை நடத்தி சோதிக்க
பாலம் கடந்து பாட்டுநதி! - உள்
   பாயும் தத்துவம் புரியவில்லை!

இவையிவை ஊக்கும் கிளர்ச்சிதரும்! - என
   இறைவன் படைத்து வைத்தனனா?
கவிமணம் வீச இவையுதவும்! - எனும்
   கணக்கெல் லாமும் செய்தனனா?
இவையிவை என்னும் வரம்பில்லா - தென்
   இதயம் தொட்டுச் செல்கின்ற
புவியுறு மெல்லாம் புதுக்கவிதை - தமை
   புத்தியில் கொடுத்து வளர்க்கிறது!

அலையலை யாக எண்ணங்கள்! - அதை
   ஆக்கும் காற்றாய் மென்னுள்ளம்!
வலைவலை யாக வார்த்தைகள்! - அதில்
   வாழும் இன்பச் சேர்க்கைகள்!
குலைகுலை யாகக் கொடுப்பதனால், - மனக்
   குளிருக் கிதமே படைப்பதனால்,
மலைமலை யாக எழுதுகிறேன்! - என்
   மனதைப் பதிக்க முயலுகிறேன்!!

-விவேக்பாரதி
06.01.2018

Comments

Popular Posts